பாதுகாப்பு உத்தரவாதம்: ரம் நடவடிக்கையால் உலகமே குழம்பிப் போய் உள்ளது

பாதுகாப்பு உத்தரவாதம்: ரம் நடவடிக்கையால் உலகமே குழம்பிப் போய் உள்ளது

தெளிவாகக் குழப்புவது என்று கூறுவார்களே அது இதுதானோ தெரியவில்லை. கடந்த 15-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின்னை நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். ஆனால் எந்த ஒரு முடிவையும் எட்டவில்லை. புட்டின் தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக டிரம்ப்புக்குக் கூறியிருந்தார். இதனை அடுத்து வெள்ளை மாளிகைக்கு உடனே வருமாறு டிரம்ப், உக்ரைன் அதிபருக்கு அழைப்பு விடுத்தார்.

தனியாகச் சென்று டிரம்ப்பிடம் சிக்கி சின்னாபின்னமாகிவிடக் கூடாது என்று கருதிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஐரோப்பியத் தலைவர்களைத் துணைக்கு அழைக்க, விஷயம் பெரிய மேட்டராகியுள்ளது.

இன்றைய தினம் (18) மாலை உக்ரைன் அதிபர் டிரம்ப்பைச் சந்திக்க உள்ள நிலையில், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர், ஜெர்மன், சுவீடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் எனப் பல முக்கிய ஐரோப்பியத் தலைவர்கள் உக்ரைன் அதிபரோடு அமெரிக்கா சென்றுள்ளார்கள். இதனால் தனியாக வைத்து உக்ரைன் அதிபரை முன்னர் மிரட்டியது போல டிரம்பால் மிரட்ட முடியாத நிலை தோன்றியுள்ளது. ஆனால் எவருமே சற்றும் எதிர்பாராத விதமாக “”உக்ரைனுக்கு அமெரிக்கா பாதுகாப்பை வழங்கும்”” என்று டிரம்ப் அறிவித்துள்ளார்!

இதுவே முக்கிய பேசுபொருளாக அமைந்துள்ளது. எந்த வகையான பாதுகாப்பு? எப்படிப் பாதுகாப்பது? ஆயுதங்களா இல்லை அமெரிக்க ராணுவமே செல்லுமா? இப்படிப் பல கேள்விகள் எழுந்துள்ளன. இதேவேளை, உக்ரைன் நாட்டின் 15% சதவிகிதமான பகுதியை ரஷ்யா கைப்பற்றி வைத்துள்ள நிலையில், முக்கிய இடங்களான டான்பாஸ் மற்றும் கிரிமியா ஆகிய மாகாணங்களைத் தாமே வைத்திருப்போம் என்று ரஷ்ய அதிபர் புட்டின் டிரம்ப்பிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றும், நேட்டோ அமைப்போடு உக்ரைன் இனி இணையக் கூடாது என்றும் ரஷ்ய அதிபர் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டால்தான் போர் நிறுத்தம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பெரும் குழப்பமான நிலை தோன்றியுள்ளது. இன்று மாலை அதிபர் டொனால்ட் டிரம்ப் என்ன திட்டத்தை மேசை மீது வைக்க உள்ளார் என்பது எவருக்கும் தெரியாது. இது பெரும் பாதகமான விஷயமாகக்கூட இருக்கலாம்.

இல்லை என்றால் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு நன்மை பயக்கும் திட்டமாகக்கூட இருக்கலாம். ஆனால் டொனால்ட் டிரம்ப் என்ன சொல்ல இருக்கிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அனைத்து ஐரோப்பியத் தலைவர்களும் தற்போது அமெரிக்க வெள்ளை மாளிகையில் முகாமிட்டுள்ளார்கள். இது தொடர்பான மேலதிக செய்திகள் விரைவில் அதிர்வு இணையத்தில் வெளியாகும். அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்து இருங்கள்.