அமெரிக்க அதிபர் டிரம்ப், 1987ஆம் ஆண்டு கையெழுத்தான ஏவுகணை கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை (Missile Technology Control Regime – MTCR) மாற்றி அமைத்து, அதிநவீன தாக்குதல் டிரோன்களை உலக நாடுகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தடையை மீறி விற்பனை:
தற்போதைய ஒப்பந்தத்தின்படி, இதுபோன்ற கனரக ஆயுதங்கள் கொண்ட டிரோன்களை விற்பனை செய்ய “கடும் மறுப்பு” தெரிவிக்கப்படும். ஆனால், டிரம்ப் நிர்வாகம் இந்த டிரோன்களை, ஏவுகணைகளுக்குப் பதிலாக, எஃப்-16 போர் விமானங்கள் போன்ற “விமானங்களாக” வகைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், டிரோன்களை விற்பனை செய்வதில் இருந்த சட்டத் தடைகள் நீக்கப்படும்.
சவுதிக்கு முதல் விற்பனை:
டிரம்பின் இந்தப் புதிய கொள்கையின் கீழ், சவுதி அரேபியாவுக்கு 100-க்கும் மேற்பட்ட MQ-9 டிரோன்களை விற்பனை செய்ய வழி பிறக்கும். இது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட $142 பில்லியன் மதிப்புள்ள ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவின் இந்த டிரோன்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
சீனா, துருக்கிக்கு சவால்:
தற்போது உலக டிரோன் சந்தையில் இஸ்ரேல், சீனா மற்றும் துருக்கி போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நாடுகள், ஒப்பந்தங்களில் கையெழுத்திடாததால், குறைவான கட்டுப்பாடுகளுடன் டிரோன்களை விற்பனை செய்து வருகின்றன. டிரம்பின் இந்த அதிரடி முடிவு, அமெரிக்கா டிரோன் சந்தையில் முதலிடத்தை மீண்டும் பிடிக்கும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கை:
அமெரிக்காவின் இந்த முடிவு, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என கூறப்பட்டாலும், மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா போன்ற பிராந்தியங்களில் வன்முறையையும், பதட்டத்தையும் அதிகரிக்கும் என மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிபர் டிரம்பின் இந்த புதிய திட்டம், உலக ஆயுத வர்த்தகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.