அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஹூண்டாய்-எல்ஜி நிறுவனத்தின் கட்டுமானத் தளத்தில், சட்டவிரோதமாக குடியேறிய தொழிலாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை அமெரிக்க குடியேற்றத்துறை அண்மையில் மேற்கொண்டது. இந்த சோதனையில், சுமார் 300 தென் கொரியர்கள் உட்பட 475 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து தென் கொரியா அரசு கடும் அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்தது. அமெரிக்காவுடனான உறவில் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண தென் கொரிய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்ட தென் கொரிய தொழிலாளர்களுக்கு ஒரு சலுகையை வழங்கினார். அதன்படி, அவர்கள் அமெரிக்காவிலேயே தங்கி, அமெரிக்கர்களுக்குப் பயிற்சி அளிக்க முன்வந்தால், அவர்களுக்குத் தொடர்ந்து அங்கு தங்க அனுமதி வழங்கப்படும் என டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த சலுகையை ஏற்றுக்கொண்டவர்கள் மிகக் குறைவு. தென் கொரிய அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தாயகம் திரும்புவதற்கே விருப்பம் தெரிவித்தனர். இதனால், அவர்களைத் தென் கொரியாவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானம், ஒரு நாள் தாமதமாக புறப்பட்டது.