Posted in

ஆக்ஸ்ஃபோர்ட் சர்க்கஸ் ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து இருவர் கத்திக்குத்து!

லண்டனின் பரபரப்பான பகுதியான ஆக்ஸ்ஃபோர்ட் சர்க்கஸ் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை சில மணி நேர இடைவெளியில் இருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு, லண்டன் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

நேற்று முன்தினம்  அதிகாலை சுமார் 3.40 மணியளவில், 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதே ரயில் நிலையத்தில், நேற்று அதிகாலை 1.30 மணியளவில், 41 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபரும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டு, அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என காவல்துறை தெரிவித்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. அவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்தச் சம்பவங்கள் குறித்து காவல்துறை அதிகாரி டிசிஐ கேரத் டேவிஸ் கூறுகையில், “ரயில் நிலையங்களில் வன்முறைக்கு இடமில்லை. இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக விரைவான விசாரணை நடைபெற்று வருகிறது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரயில் நிலையத்தில் கூடுதல் காவலர்கள் நிறுத்தப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும், இந்தச் சம்பவங்களை நேரில் கண்டவர்கள் அல்லது இதுபற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாகத் தங்களுக்குத் தெரிவிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எந்தவொரு சிறிய தகவலும் விசாரணைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading