அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன், ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான அனைத்துக் கோப்புகளையும் வெளியிடுமாறு நீதித்துறையை (Department of Justice – DOJ) வலியுறுத்தியுள்ளார். பாலியல் குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இறந்த முன்னாள் நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு ஜனநாயகக் கட்சியினர் கோரி வரும் நிலையில், மைக் ஜான்சனின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிடுவதற்கு டிரம்பின் நிர்வாகம் முதலில் தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. எப்ஸ்டீனுக்கு வாடிக்கையாளர் பட்டியல் இருந்ததற்கோ அல்லது அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று நீதித்துறை மற்றும் FBI முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் சபாநாயகர் மைக் ஜான்சன், “வெளிப்படைத்தன்மைக்கு நான் ஆதரவாக இருக்கிறேன். இது மிகவும் நுட்பமான விஷயம், ஆனால் எல்லாவற்றையும் வெளியிட வேண்டும், மக்கள் அதைத் தீர்மானிக்கட்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும், அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி (Pam Bondi) எப்ஸ்டீனின் “வாடிக்கையாளர் பட்டியல்” பற்றிய தனது முந்தைய அறிக்கைகளைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஜான்சன் கோரியுள்ளார். பாம் பாண்டி முன்பு, எப்ஸ்டீன் விசாரணை தொடர்பான கோப்புகள், முக்கியப் பிரபலங்களின் பெயர்கள் அடங்கிய ஆவணங்கள் உட்பட, தனது மேசையில் இருப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தனக்கு ஒரு வாடிக்கையாளர் பட்டியல் இருப்பதாகக் கூறியதை அவர் மறுத்துள்ளார்.
இந்த விவகாரத்தால் டிரம்ப் நிர்வாகத்திற்குள் பிளவுகள் ஏற்பட்டதாகவும், இது டிரம்புக்கு ஒரு சவாலான அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்ஸ்டீன் விவகாரத்தை விரைவில் தீர்க்க வேண்டும் என்றும், முக்கியப் பிரச்சினைகளில் நீதித்துறை கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.