Posted in

நேட்டோ போர் பயிற்சி! USற்கு செக் வைக்கும் பிரான்ஸ் – உலகப்போராக மாறுமா ட்ரம்ப்பின் பிடிவாதம்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை எப்படியாவது கைப்பற்றியே தீருவேன் என்று மிரட்டி வரும் நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அதற்குப் பதிலடியாக ஒரு அதிரடி ராணுவத் திட்டத்தை முன்வைத்துள்ளார். கிரீன்லாந்து மண்ணில் அதிகாரப்பூர்வமான நேட்டோ (NATO) கூட்டுப் போர் பயிற்சியை நடத்த வேண்டும் என்று பிரான்ஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தவும், கிரீன்லாந்து டென்மார்க்கிற்கே சொந்தம் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லவும் பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்த ராணுவப் பயிற்சியின் முக்கிய நோக்கமே அமெரிக்காவை இதில் பங்கேற்க வைப்பதுதான். நேட்டோ அமைப்பின் விதிகளின்படி, ஒரு பயிற்சியில் உறுப்பு நாடுகள் பங்கேற்க வேண்டும். ஒருவேளை அமெரிக்கா இதில் பங்கேற்றால், கிரீன்லாந்து டென்மார்க்கின் இறையாண்மைக்கு உட்பட்டது என்பதை அமெரிக்காவே ஒப்புக்கொண்டதாகிவிடும். “அமெரிக்கா ஒரு ரவுடியைப் போல (Bully) நடந்துகொள்கிறது, நாங்கள் சட்டத்தின் ஆட்சியைத் தான் மதிப்போம்” என்று மக்ரோன் டாவோஸ் கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

ஏற்கனவே பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தங்களது சிறிய அளவிலான ராணுவக் குழுக்களை கிரீன்லாந்திற்கு ரகசியமாக அனுப்பி ‘Arctic Endurance’ என்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்குப் பதிலடியாக ட்ரம்ப், “கிரீன்லாந்தை நான் எளிதான முறையிலோ (Easy way) அல்லது கடினமான முறையிலோ (Hard way) கைப்பற்றுவேன், இதில் திரும்புவதற்கே இடமில்லை” என்று மிரட்டியுள்ளார். “அடுத்த கட்டமாக என்ன செய்வீர்கள்?” என்ற கேள்விக்கு “பொறுத்திருந்து பாருங்கள்” என்று அவர் விடுத்த மிரட்டல் ஐரோப்பாவை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறுபுறம், ரஷ்யாவும் சீனாவும் இந்த விவகாரத்தில் அமெரிக்காவைக் கடுமையாக விமர்சித்துள்ளன. கிரீன்லாந்தை ரஷ்யா அல்லது சீனா கைப்பற்றப் பார்க்கிறது என்று ட்ரம்ப் கூறி வருவதை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மறுத்துள்ளார். அமெரிக்கா தனது சுயநலத்திற்காகப் பொய்யான அச்சுறுத்தல்களை உருவாக்குவதாகச் சீனாவும் குற்றம் சாட்டியுள்ளது. இதன் மூலம் கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்கா உலக அளவில் தனிமைப்படுத்தப்பட்டு வருவது தெளிவாகிறது.

தற்போது டாவோஸ் நகரில் தங்கியுள்ள ட்ரம்ப், ஐரோப்பியத் தலைவர்களைச் சந்தித்து கிரீன்லாந்தை விற்பனை செய்ய வற்புறுத்த உள்ளார். ஆனால், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவின் இந்த “கையகப்படுத்தும்” முயற்சியைத் தடுத்து நிறுத்தத் தயாராகி வருகின்றன. இது ஒரு சாதாரண நிலப்பரப்பு விவகாரமாகத் தொடங்கினாலும், தற்போது ஒரு உலகளாவிய ராணுவ மற்றும் வர்த்தகப் போராக உருவெடுத்துள்ளது.