அமெரிக்காவில், குடிவரவு அமலாக்க அதிகாரிகளைக் கொலை மிரட்டல் விடுத்த ஒரு பெண் மீது ஃபெடரல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில், அவர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட பழமைவாத அரசியல் செயற்பாட்டாளர் சார்லி கிர்க்-கின் மரணத்தை நேரடியாகக் குறிப்பிட்டு மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“சார்லி கிர்க் இறந்துவிட்டார், அதை நாங்கள் கொண்டாடுகிறோம்!”
மாசசூசெட்ஸின் மால்டன் நகரைச் சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க பெத்தனி அபிகெயில் டெரில் (Bethany Abigail Terrill) என்ற பெண் மீது, ‘அமெரிக்க அதிகாரி ஒருவரைக் கொலை செய்வதாக அச்சுறுத்தியதாக’ குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையின்படி, மால்டன் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே குடிவரவு அமலாக்க நடவடிக்கையில் (Immigration Enforcement) ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சிலரைக் கண்ட அந்தப் பெண், தனது மொபைலில் படமெடுத்தபடி, வேண்டுமென்றே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர், “சார்லி கிர்க் இறந்துவிட்டார், நாங்கள் அதை விரும்புகிறோம். உங்களைத் தேடி வருகிறோம், உங்களைக் கொல்லப் போகிறோம்!” என்று அதிகாரிகளைப் பார்த்துக் கூச்சலிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல் ஏன்?
குடிவரவு கைது நடவடிக்கையின்போது, அந்தப் பெண் அதிகாரிகளைத் தள்ளிவிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்தக் கணத்தில், சமீபத்தில் நடந்த ஒரு அரசியல் கொலை சம்பவத்தைக் குறிப்பிட்டு அவர் வெளிப்படையாகக் கொலை மிரட்டல் விடுத்திருப்பது, அமெரிக்க அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம், அதிகாரிகளின் உடல் கேமராக்களிலும், அந்தப் பெண்ணின் மொபைலிலும் பதிவாகியுள்ளது.
ஒரு அமெரிக்க அதிகாரியைக் கொலை செய்வதாக அச்சுறுத்தும் குற்றச்சாட்டிற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இந்த மிரட்டலின் பின்னணியில் உள்ள அரசியல் வெறுப்பு, தேசிய அளவில் தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ளது.