டிரம்ப்-புடின் சந்திப்புக்கு முன்னதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைனின் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத்தர முடியாது என்று அவர் ஆவேசமாக கூறியுள்ளார். இதனால் உலக அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரைனின் நிலப்பரப்பு, அதன் அரசியலமைப்பின்படி வரையறுக்கப்பட்ட ஒன்று. ஒருபோதும் ஆக்கிரமிப்பாளருக்கு அதை விட்டுத்தர மாட்டோம்” என ஜெலென்ஸ்கி திட்டவட்டமாக அறிவித்தார்.
ஆகஸ்ட் 15-ஆம் தேதி அலாஸ்காவில் டிரம்ப்-புடின் இடையே நடக்கவிருக்கும் சந்திப்பு, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றியது. ஆனால், இதில் நிலப்பகுதிகளை பரிமாறிக் கொள்வது பற்றியும் பேசப்படலாம் என்ற தகவல் வெளியானதே ஜெலென்ஸ்கியின் இந்த ஆவேச அறிவிப்புக்குக் காரணம்.
உக்ரைன் இல்லாத அமைதிப் பேச்சுவார்த்தைகள் “சமாதானத்திற்கு எதிரானவை” என்றும் அவை ஒருபோதும் வெற்றிபெறாது என்றும் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பு, போரின் எதிர்காலத்தை தீர்மானிக்கலாம் என நம்பப்படுகிறது.
ரஷ்யா தற்போது உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது. கிரிமியா, டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், ஜபோரிஜியா, கெர்சன் உள்ளிட்ட பகுதிகளை ரஷ்யா உரிமை கொண்டாடி வருகிறது.
இந்த சந்திப்பின் முடிவுகள், உக்ரைனின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் என அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜெலென்ஸ்கியின் இந்த அதிரடி அறிவிப்பு, டிரம்ப்-புடின் சந்திப்பின்போது என்ன நடக்கும் என்ற பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. உக்ரைனின் உறுதியான நிலைப்பாடு, இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளை எந்த திசையில் கொண்டு செல்லும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.