கீழே வீடியோ இணைப்பு
லண்டன்: கேம்பிரிட்ஜ்ஷைர் பகுதியில் அதிவேக ரயில் ஒன்றில் கத்தியுடன் புகுந்து பயணிகள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர், கைது செய்யப்படுவதற்கு முன் காவல்துறையினரைப் பார்த்து “என்னை கொன்று விடுங்கள், என்னை கொன்று விடுங்கள்” என்று சத்தமிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் மொத்தம் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் இரண்டு பேர், பயணிகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட ரயில் ஊழியர் ஒருவர் உட்பட, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தது என்ன?
டோன்காஸ்டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த LNER ரயிலில் சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பீட்டர்பரோ ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் தொடங்கியதாக கூறப்படுகிறது.
கத்தியுடன் இருந்த ஒரு நபர் பெட்டிகளுக்குள் புகுந்து பயணிகளை குத்தத் தொடங்கினார். இதனால் பயணிகள் பீதியடைந்து, ரயிலின் கழிவறைகளுக்குள்ளும் இருக்கைகளுக்கு அடியிலும் பதுங்கினர். தகவல் கிடைத்தவுடன், ரயில் ஹன்டிங்டன் ரயில் நிலையத்தில் அவசரமாக நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆயுதம் தாங்கிய காவல்துறையினர், சந்தேக நபரை Taser கருவி மூலம் சுட்டு மடக்கிப் பிடித்தனர்.
சந்தேக நபர் காவல்துறையினரிடம், “என்னை கொன்று விடுங்கள்” என்று கூச்சலிட்டதை ஒரு டாக்ஸி ஓட்டுநர் பதிவு செய்துள்ளார்.
‘போதகர்’ காப்பாற்றிய ஊழியர் – பயங்கரவாதம் இல்லை
தாக்குதல் நடத்தியவர் 32 வயது பிரித்தானியர் என்றும், அவர் பீட்டர்பரோவைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை முதலில் ‘பெரும் அச்சுறுத்தலாக’ (Major Incident) அறிவித்த போதிலும், இது பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்று பிரித்தானிய போக்குவரத்து காவல்துறை (BTP) உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதலைத் தடுக்க, வீரத்துடன் செயல்பட்ட LNER ரயில் ஊழியர் ஒருவரே உயிருக்கு ஆபத்தான நிலையில் காயம் அடைந்துள்ள நிலையில், அவரது துணிச்சலான செயல் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக காவல்துறை பாராட்டியுள்ளது.
சந்தேக நபரின் நோக்கத்தை அறிய தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும், மற்றொருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர் இந்தச் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று நிரூபிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.