Posted in

10 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அபூர்வக் கண்டுபிடிப்பு!

மிகப்பெரிய கருந்துளையில் இருந்து (Supermassive Black Hole) இதுவரை கண்டிராத மிக பிரகாசமான ஒளிக் கற்றை (Flar) ஒன்றை வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஒளியானது 10 ட்ரில்லியன் சூரியன்களின் வெளிச்சத்திற்குச் சமமானதாக இருந்தது.

இந்த பிரம்மாண்டமான ஒளிக் கற்றை, ஒரு நட்சத்திரம் மிக அருகில் வந்தபோது கருந்துளையால் சிதைக்கப்பட்டு, விழுங்கப்பட்டதால் (Tidal Disruption Event – TDE) ஏற்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த விண்மீன் நிகழ்வு, கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தால் (Caltech) இயக்கப்படும் பலமார் ஆய்வகத்தில் (Palomar Observatory) உள்ள கருவி மூலம் 2018 ஆம் ஆண்டில் முதலில் கண்டறியப்பட்டது.

இந்த ஒளிக் கற்றை, சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு அதன் உச்சபட்ச பிரகாசத்தை அடைந்தது. இது இதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட இதுபோன்ற நிகழ்வுகளை விட 30 மடங்கு அதிக ஒளியுடன் பிரகாசித்தது.

இந்த பிரகாசமான ஒளிக் கற்றை சுமார் 10 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கருந்துளையில் இருந்து வருகிறது. இது இதுவரை அவதானிக்கப்பட்டதிலேயே மிகவும் தொலைவில் உள்ள ஒரு பிரகாசமான நிகழ்வாக இருக்கிறது.

இவ்வளவு தூரத்தில் நிகழ்ந்த ஒரு பிரகாசமான நிகழ்வைக் கவனிப்பது, பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்தில் மிகப்பெரிய கருந்துளைகள் எவ்வாறு உருவாயின மற்றும் அவை அவற்றின் சுற்றுப்புறங்களுடன் எவ்வாறு செயல்பட்டன என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.