சூடானின் துணை இராணுவப் படையான ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ் (RSF), டார்ஃபூர் பகுதியின் எல் ஃபாஷர் (El Fasher) நகரில் நடந்த கொடூரமான படுகொலைகளுக்குப் பொறுப்பானதாகக் கருதப்படும் தமது சில போராளிகளை, குறிப்பாக ‘அபு லூலு’ (Abu Lulu) என்று அறியப்படும் ஒரு தளபதியைக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நடவடிக்கை மனித உரிமைக் குழுக்கள் மற்றும் சூடான் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகொலைகளுக்கான உலகளாவிய கோபத்தை திசை திருப்பும் ஒரு ‘மக்கள் தொடர்பு உத்தியாகவே’ (PR Stunt) இந்த கைது பார்க்கப்படுகிறது.
சுமார் 18 மாத கால முற்றுகைக்குப் பிறகு RSF படையினர் எல் ஃபாஷர் நகரைக் கைப்பற்றியபோது, பொதுமக்கள் மீது பாரிய படுகொலைகள், கற்பழிப்பு, கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், அபு லூலு நிராயுதபாணியான நபர்களை நெருங்கிய தூரத்தில் சுட்டுக் கொன்றதாகவும், கொலைகளைக் கொண்டாடியதாகவும் பதிவாகியுள்ளது. இந்த காணொளிகளை மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் திறந்த மூல ஆய்வாளர்கள் (Open-source investigators) உறுதிப்படுத்தியுள்ளனர்.
சூடான் மக்கள் மத்தியில், “நீங்களும் அபு லூலுதான்” என்று பொருள்படும் வகையில் “You are all Abu Lulu” என்ற ஹேஷ்டேக் பரவலாகி உள்ளது. அதாவது, RSF-ன் ஒட்டுமொத்தப் படையுமே இதுபோன்ற கொடூரங்களில் ஈடுபடுகிறது என்று அவர்கள் கருதுகின்றனர்.
RSF-ன் தலைவர் முகமது ஹம்டன் டகாலோவின் (Mohamed Hamdan Dagalo – Hemedti) சகோதரரும் துணைத் தலைவருமான அப்துல் ரஹீம் டகாலோ (Abdul Rahim Dagalo) தாக்குதல்களின்போது எல் ஃபாஷரில் இருந்ததாக ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
:அபு லூலுவின் கைது, படுகொலைகளுக்கான RSF-ன் ஒட்டுமொத்தப் பொறுப்பிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே செய்யப்படுகிறது என்று சூடானிய ஆராய்ச்சியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை, சூடானில் நடந்து வரும் இந்தக் கொடூரமான குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.