Posted in

‘கோடாரிக் கொலைகாரன்’ குற்றங்கள் நிரூபணம்: வாழ்நாள் சிறைகோரி வழக்கறிஞர்கள் முழக்கம்!

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) விசாரணையில், ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கிய தீர்ப்பொன்று தயாராகி வருகிறது! சூடானில் நடந்த கொடூரமான டார்பூர் இனப்படுகொலையின் முக்கிய சூத்திரதாரியும், ‘கோடாரிக் கொலைகாரன்’ என வர்ணிக்கப்படுபவனுமான அலி முஹம்மது அலி அப்த்-அல்-ரஹ்மான் (அலி குஷாய்ப்) மீதான தண்டனை விபரம் இறுதி செய்யப்பட உள்ளது.

ஐ.சி.சி.யில் நடந்தது என்ன?

டார்பூரில், மக்கள் மீது மிலேச்சத்தனமான வன்முறையை ஏவிவிட்ட இந்த முன்னாள் ஜன்ஜாவித் போராளித் தலைவன், போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என 27 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளான்.

வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த ஆதாரங்களின்படி, அப்பாவி மக்களைக் கொடூரமாக சித்திரவதை செய்ததோடு மட்டுமல்லாமல், இரண்டு பேரை இவன் கோடாரியால் வெட்டிக் கொன்றான் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவனது கொடூரச் செயல்கள் காரணமாகவே இவன் ‘கோடாரிக் கொலைகாரன்’ (Axe Murderer) என அழைக்கப்படுகிறான்.

தற்போது, ஐ.சி.சி.யில் தண்டனை குறித்த வாதங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. இவன் செய்த குற்றங்களின் அக்கிரமத்தைக் கருத்தில் கொண்டு, வழக்கறிஞர்கள் குழு, அலி குஷாய்புக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை (Life Sentence) வழங்க வேண்டும் என்று தீப்பறக்கும் வாதங்களை முன்வைத்துள்ளனர். இவ்வளவு கொடூரமான குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவது மட்டுமே நீதியாகவும், எதிர்காலத்தில் மற்றவர்கள் இதுபோன்ற குற்றங்களைச் செய்யாமல் தடுக்கும் எச்சரிக்கையாகவும் இருக்கும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்!

சட்டத்தின் பிடியில் சிக்கிய இந்த கொடூரக் குற்றவாளிக்கு சர்வதேச நீதிமன்றம் என்ன தண்டனை வழங்கப் போகிறது என்ற பதட்டம் உலகெங்கிலும் எழுந்துள்ளது!