உக்ரைன் மீதான ரஷ்யாவின் பெரும் ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல்களின் போது, ரஷ்யாவின் விமானங்கள் அல்லது டிரோன்கள் நேட்டோ நாடுகளின் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழையலாம் அல்லது அருகே வரலாம் என்ற அச்சத்தில், போலந்து மற்றும் ருமேனியா நாடுகளில் நேட்டோ (NATO) போர் விமானங்கள் (Fighter Jets) அவசரமாகப் பறக்கவிடப்பட்டன. மேலும், தரை வழி வான்தளப் பாதுகாப்புக் கருவிகள் அதிகபட்ச தயார் நிலையில் வைக்கப்பட்டன.
ரஷ்யாவின் இந்தத் தாக்குதல் மேற்கு உக்ரைனில் உள்ள டெர்னோபில் (Ternopil) நகரை மையமாகக் கொண்டிருந்தது. அங்கு இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் தாக்கப்பட்டதில், குழந்தைகள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர்.
ருமேனியா பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்யத் தாக்குதலின் போது ஒரு டிரோன் சுமார் 5 மைல் தூரம் ருமேனியாவின் வான்வெளிக்குள் நுழைந்ததாகத் தெரிவித்தது. உடனடியாக, நேட்டோ படைகளின் ஒரு பகுதியாக இருந்த இரண்டு ஜெர்மன் யூரோஃபைட்டர்கள் மற்றும் இரண்டு ருமேனிய F-16 போர் விமானங்கள் கண்காணிப்புக்காக அனுப்பப்பட்டன.
போலந்தின் ஆயுதப் படைகள் நடவடிக்கைக் கட்டளையகம் (Operational Command), தங்கள் வான்வெளியைப் பாதுகாப்பதற்காக போலந்து மற்றும் நேட்டோ நட்பு நாடுகளின் போர் விமானங்கள் பறக்கவிடப்பட்டதாகவும், வான்தளப் பாதுகாப்பு அமைப்புகள் “அதிகபட்ச தயார்நிலை” யை அடைந்ததாகவும் அறிவித்தது.
இந்த நடவடிக்கையில் போலந்து, டச்சு, நோர்வே மற்றும் ஸ்பெயின் நாடுகளின் போர் விமானங்களும், ஜெர்மன் பேட்ரியாட் (Patriot) வான் பாதுகாப்பு அமைப்புகளும் ஈடுபடுத்தப்பட்டன.
ரஷ்யாவின் தாக்குதல் அதன் எல்லைக்கு அருகில் நடக்கும்போது, அத்துமீறலைத் தடுக்கவும், தங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக நேட்டோ நாடுகள் தெரிவித்தன.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய இந்தத் தாக்குதல்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்த உக்ரைனுக்குக் கூடுதல் உதவி தேவை என்ற கோரிக்கையையும் மீண்டும் எழுப்பியுள்ளது.