Posted in

இந்தோனேசியப் பள்ளி இடிபாடுகளில் பலி எண்ணிக்கை 60-ஐ தாண்டியது!

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோர்ஜோ நகரில், புகழ்பெற்ற ‘அல் கோசினி’ இஸ்லாமிய உறைவிடப் பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டியுள்ளது.

செப்டம்பர் 29 அன்று, மாணவர்கள் மதிய வேளைத் தொழுகைக்காகக் கூடியிருந்தபோது, பழமையான இந்தக் கட்டிடத்தில் அங்கீகரிக்கப்படாத கூடுதல் கட்டுமானப் பணிகள் நடந்ததால், அது பாரம் தாங்காமல் திடீரென இடிந்து விழுந்தது.

மீட்புப் பணிகள்: 61 பேரின் உடல்கள் மீட்பு!

சமீபத்திய தகவல்களின்படி, தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (BNPB) குழுவினர் இடிபாடுகளுக்குள் இருந்து மேலும் பல உடல்களை மீட்டெடுத்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களாவர்.

மேலும் 2 மாணவர்கள் மாயம்!

விபத்தில் சிக்கியவர்களில் 99 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நான்கு பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்கு அடியில் மேலும் இரண்டு மாணவர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியை மீட்புப் படையினர் கனரக இயந்திரங்கள் உதவியுடன் தீவிரப்படுத்தியுள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் இருந்து சில உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதால், உறவினர்களிடமிருந்து டி.என்.ஏ (DNA) மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சடலங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

அங்கீகாரமற்ற கட்டுமானம் காரணமா?

இந்தச் சம்பவத்திற்கு, உரிய அனுமதி பெறாமல் கட்டிடத்தில் கூடுதல் தளங்கள் கட்ட முயன்றதே காரணம் என்று அதிகாரிகள் மற்றும் கட்டுமான வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.