Posted in

பாலியல் மற்றும் கோகோயின் புகார்களால் அரசியலை விட்டு விலகிய முன்னாள் எம்.பி மரணம்

பாலியல் மற்றும் கோகோயின் புகார்களால் அரசியலை விட்டு விலகிய முன்னாள் எம்.பி டேவிட் வார்பர்டன், 59 வயதில் திடீரென மரணமடைந்துள்ளார்.

டேவிட் வார்பர்டனின் செல்சியா அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்த மருத்துவக் குழுவினரால், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது மரணம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

டேவிட் வார்பர்டன், மே 2015 முதல் ஜூன் 2023 வரை சோமர்செட் மற்றும் ஃப்ரோம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். அவரது மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னாள் எம்.பி சைமன் டான்க்ஸுக் கூறுகையில், “இது மிகவும் சோகமான செய்தி. அவர் அரசியலில் கடினமான காலகட்டத்திற்குப் பிறகு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினார். அவர் ஒரு எரிசக்தி நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார். அவருடைய வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு நான் அவரை சந்தித்தேன். அவர் மிகவும் நன்றாக இருந்தார். அவரைச் சுற்றி ஒரு சிறந்த குழு இருந்தது. அவருக்கு எல்லாம் சிறப்பாகவே நடந்து கொண்டிருந்தது” என்றார்.

ஏப்ரல் 2022-ல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, வார்பர்டன் டோரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ‘தி சண்டே டைம்ஸ்’ இதழ், அவர் ஒரு மேசையில் வெள்ளை நிறப் பொடியுடன் அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டது. நாடாளுமன்றத்தின் சுயாதீன புகார்கள் மற்றும் குறைதீர்ப்புத் திட்டம் (ICGS) இது குறித்து விசாரணை நடத்தியது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த வார்பர்டன், மன அழுத்தத்தால் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இரண்டு பெண்களிடம் அத்துமீறியது தொடர்பான புகார்கள் குறித்து தனக்கு நியாயமான விசாரணை மறுக்கப்பட்டதாகக் கூறி, ஜூன் 2023-ல் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, “நான் மிகவும் வீரியமுள்ள விஸ்கியை அருந்திய பிறகு கோகோயின் எடுத்தேன்” என்று ஒப்புக்கொண்டார். ஆனால், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

லண்டன் ஆம்புலன்ஸ் சேவை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், செல்சியாவில் உள்ள செல்சியா கிரசென்ட்டில் ஒரு சம்பவம் நடந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் ஒரு ஆம்புலன்ஸ் குழு மற்றும் ஒரு மருத்துவரை அனுப்பினோம். ஆனால், அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது” என்றார்.

மெட்ரோபொலிட்டன் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,  செல்சியா கிரசென்ட்டில் உள்ள ஒரு முகவரிக்கு லண்டன் ஆம்புலன்ஸ் சேவையால் காவல்துறை வரவழைக்கப்பட்டது. 50 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார். அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணம் எதிர்பாராத ஒன்றுதான். ஆனால், அதில் சந்தேகம் எதுவும் இல்லை என்றார்.

2002-ல் வார்பர்டனை திருமணம் செய்து கொண்ட அவரது மனைவி ஹாரியட், கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.