அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் பதவியேற்ற ஜப்பானின் முதலாவது பெண் தலைவர் சனாஜே டகாய்ச்சி (Sanae Takaichi) அவர்களை நேரில் சந்தித்து ஆனந்தப் பாராட்டு மழை பொழிந்தார்! இந்த வரலாற்றுச் சந்திப்பில், உலகையே உலுக்கப் போகும் இரண்டு இமாலய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
ஜப்பானின் வரலாற்றிலேயே முதல் பெண் பிரதமராகப் பதவியேற்றுள்ள சனாஜே டகாய்ச்சிக்கு, டிரம்ப் தனது பிரத்யேகப் பாணியில் பாராட்டுக்களை அள்ளி வழங்கினார்.
“ஜப்பானுக்கு எந்த உதவி தேவை என்றாலும், எதைக் கேட்டாலும், ஒரு நொடியில் நாங்கள் அங்கே இருப்போம்! நீங்கள் ஒரு மிகப் பெரிய தலைவராகப் போகிறீர்கள். ஜப்பான்-அமெரிக்க உறவில் ஒரு ‘தங்க வயது’ (New Golden Age) தொடங்கிவிட்டது!” என்று டிரம்ப் உணர்ச்சி பொங்கக் கூறினார்.
டகாய்ச்சியும் சளைக்காமல், ட்ரம்பை நோபல் சமாதானப் பரிசிற்குப் பரிந்துரைக்கப் போவதாக அறிவித்தார். இரு நாடுகளின் தலைவர்களும் கைகுலுக்கி, இனி உறவு ‘வரலாற்றுச் சிறப்புமிக்கதாக’ இருக்கும் என்று பிரகடனப்படுத்தியுள்ளனர்!
இந்தச் சந்திப்பின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான ஒப்பந்தம், ‘அரிதான கனிமங்கள்’ (Rare Earths) தொடர்பானதாகும்.
செல்போன்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள் (EVs) மற்றும் அதிநவீன இராணுவ தளவாடங்கள் போன்ற முக்கிய தொழில்நுட்பங்களுக்குத் தேவையான அரிதான கனிமங்களின் உற்பத்தியில், தற்போது சீனா தான் உலகை ஆட்சி செய்கிறது.
சீனாவிற்குப் போட்டியாக, அதன் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அரிதான கனிமங்களின் சப்ளையை உறுதி செய்யவும், இரு நாடுகளுக்குமிடையே கூட்டு முதலீடுகளை மேம்படுத்தவும் அமெரிக்காவும், ஜப்பானும் உடன்பட்டுள்ளனர்.
இந்த அதிரடி ஒப்பந்தத்தின் மூலம், இந்த முக்கியமான கனிமங்களுக்காகச் சீனாவை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் இனி இல்லை என்ற வலுவான செய்தியை டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா, உலக நாடுகளுக்கும் குறிப்பாகப் பீஜிங்கிற்கும் மிகத் தெளிவாக அனுப்பியுள்ளது.
டோக்கியோவில் கையெழுத்தான இந்த ஒப்பந்தம், ஆசியாவில் பாதுகாப்பு மற்றும் வர்த்தகப் புவிசார் அரசியல் சமநிலையை மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கும் என உலகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்!