கிறிஸ்மஸ் சந்தையில் குடும்பங்களுக்கு முன்னால் ‘மக்டி’ கத்தியுடன் ரவுடிகள் அட்டகாசம் – “உங்களைக் கண்டுபிடிப்போம்” எனப் பொலிஸ் எச்சரிக்கை!
பிரிட்டனின் பிரபலமான கிறிஸ்மஸ் சந்தை (Christmas Market) ஒன்றில் குடும்பங்கள் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, நான்கு பேர் கொண்ட முகமூடி அணிந்த குழு ஒன்று பயங்கரமான மக்டி கத்திகளைக் (Machetes) காண்பித்து அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் (Nottingham) நகரின் மையத்தில் உள்ள பழைய சந்தைச் சதுக்கத்தில் (Old Market Square) அமைக்கப்பட்டுள்ள பிரபலமான ‘வின்டர் வொண்டர்லேண்ட்’ (Winter Wonderland) என்ற கிறிஸ்மஸ் சந்தை மற்றும் பொழுதுபோக்கு வளாகத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
முகமூடி அணிந்த நான்கு இளைஞர்களில், இருவர் கையில் மக்டி (Machetes) போன்ற பெரிய கத்திகளை வைத்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் குழுவினர் கவுன்சில் ஹவுஸுக்கு வெளியே மற்றொரு கும்பலுடன் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் ஏராளமான குடும்பங்களும், குழந்தைகளும் வருகை தரும் இந்தப் பகுதியில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
6.15 மணிக்குத் தொலைபேசி அழைப்பு கிடைத்தவுடன் பொலிஸார் விரைந்து வந்து அப்பகுதியில் பலரைச் சோதனை செய்தனர். இருப்பினும், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தபோது சந்தேக நபர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தேடுதல் வேட்டை
பொலிஸார் தற்போது சிசிடிவி காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான எக்ஸ் (X) தள காணொளிகளின் அடிப்படையில் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர். காணொளிகளில் நான்கு இளைஞர்களும் முகமூடி மற்றும் கருப்பு ஜாக்கெட்டுகளை அணிந்துகொண்டு, இரண்டு எலக்ட்ரிக் பைக்குகளில் (e-bikes) நகரத்தைச் சுற்றித் திரிவது பதிவாகியுள்ளது. “நாங்கள் உங்களைக் கண்டுபிடிப்போம் (WE WILL FIND YOU)” என்று பொலிஸார் எச்சரித்துள்ளதோடு, பொதுமக்களிடம் இந்தக் குழுவினர் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவிக்குமாறும் கோரியுள்ளனர்.