Posted in

பேர்நிறுத்தத்தை மீறிய இஸ்ரேலிய இராணுவத்தினர்: இரண்டு பாலஸ்தீனியர்கள் பலி

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் அமுலில் உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தின் (Ceasefire Agreement) உறுதித்தன்மை கேள்விக்குறியாகும் வகையில், காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

நேற்று காசாவின் வடக்கில் உள்ள பெய்ட் லஹியா (Beit Lahia) நகரில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உடனடியாக நடக்கவிருந்த தாக்குதலுக்காக ஆயுதங்கள் சேமிக்கப்பட்டிருந்த இராணுவ உள்கட்டமைப்பை தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட இருவரின் சடலங்களும் காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு (Al-Shifa Hospital) கொண்டு வரப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தத் தாக்குதலுக்கு முந்தைய இரவில் (செவ்வாய்க்கிழமை) இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, இஸ்ரேல் மீண்டும் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பதாக அறிவித்திருந்தது.

இருதரப்பும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையைக் கொண்ட இந்தப் போர்நிறுத்தத்தை, இஸ்ரேலின் புதன்கிழமை தாக்குதல் சந்தேகத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

ஹமாஸ் அமைப்பு, போர்நிறுத்தத்தை மீறி புதிய உண்மைகளை பலவந்தமாகத் திணிக்கும் இஸ்ரேலின் நோக்கத்தை இந்தத் தாக்குதல்கள் வெளிப்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. அதே வேளையில், தாம் ஒப்பந்தத்திற்குக் கட்டுப்படுவதாக அது கூறியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் தாங்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்போம் என்றும், ஆனால் “எந்தவொரு மீறலுக்கும் உறுதியான பதில் அளிக்கப்படும்” என்றும் கூறியுள்ளது.