லண்டன்/பிரிட்டன்: 11-11-2025
பிரிட்டன் முழுவதும் உள்ள முக்கியச் சந்தைகளில் (High Streets) நடக்கும் குற்றச் செயல்பாடுகளை ஒடுக்கும் நோக்குடன் தேசிய அளவில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் மெஷினைஸ் 2’ (Operation Machinize 2) அதிரடி நடவடிக்கையில், ஆயிரக்கணக்கான வர்த்தக நிறுவனங்கள் இலக்கு வைக்கப்பட்டுச் சோதனையிடப்பட்டன. மேலும் இந்த திடீர் சோதனைகள் இடம்பெற்று வருகிறது.
தேசியக் குற்றவியல் நிறுவனம் (NCA) தலைமையிலும், தேசிய காவல்துறைத் தலைவர்களின் கவுன்சில் (NPCC) ஒத்துழைப்புடனும் இந்த மாபெரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பிரிட்டனின் அனைத்துக் காவல் துறைகள், மண்டல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவுகள், உள்துறை அமைச்சகத்தின் குடியேற்ற அமலாக்கம், வர்த்தகத் தரநிலைகள் அமைப்பு (Trading Standards), சுங்க மற்றும் வருவாய் துறை (HMRC) மற்றும் கம்பெனிஸ் ஹவுஸ் (Companies House) உள்ளிட்ட பல முக்கிய அரசு அமைப்புகள் பங்கேற்றன.
இவர்கள் அனைவரும் ஒன்றாக கடைகளுக்குள் வருவதால், ஒருவர் கடையில் வேலை செய்யும் நபர்களின் குடியுரிமை பற்றி விசாரிக்க, மற்ற அதிகாரி கடைகளில் உள்ள VAPE, (அதாவது சந்தையில் அரசால் அனுமதிக்கப்படாத) VAPE உலவி வருகிறது அது தொடர்பாகவும் சிகரட் தொடர்பாகவும் ஆராய்கிறார்கள். மற்றைய அதிகாரி வருமான வரித்துறை என்பதனால் அவர் கடை உரிமையாளரை விசாரிக்கிறார். இப்படி பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஒரே நேரத்தில் சிறு சிறு கடைகளுக்குள் புகுந்து பெருமளவில் விசாரணை நடத்தி பொருட்களை பணத்தை பறி முதல் செய்து வருகிறார்கள்.
இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் பின்வரும் முக்கிய விடையங்கள் நடந்துள்ளது:
2734 வர்த்தக நிறுவனங்கள் சோதனையிடப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது.
924 தனிநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
£10.7 மில்லியன் (சுமார் ₹107 கோடிக்கு மேல்) மதிப்புள்ள சந்தேகத்திற்குரிய கறுப்புப் பணம் மற்றும் கிரிமினல் வருமானம் பறிமுதல் செய்யப்பட்டது.
£2.7 மில்லியன் (சுமார் ₹27 கோடி) மதிப்புள்ள சட்டவிரோதப் பொருட்கள் அழிக்கப்பட்டன.
சட்டவிரோதப் பொருட்கள் கைப்பற்றல்
அழிக்கப்பட்ட சட்டவிரோதப் பொருட்களில், அதிக வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கும் பொருட்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன: 1,11,000 ஆபத்தான, சட்டவிரோத வேப் (Vapes) சாதனங்கள். 4.5 மில்லியன் சட்டவிரோத சிகரெட்டுகள்.622 கிலோ சட்டவிரோத புகையிலை (இதன் மூலம் சுமார் £3.5 மில்லியன் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது).
வணிகங்களுக்கு அபராதம் மற்றும் விசாரணை
சட்டவிரோத ஆட்களை வேலைக்கு அமர்த்துதல் மற்றும் வாடகைக்கு விடுதல் தொடர்பாக, 341 பரிந்துரை அறிவிப்புகள் (Referral Notices) வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், குற்றம் நிரூபிக்கப்பட்டால்:வேலைக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கு ஒரு தொழிலாளிக்கு £60,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
வாடகைக்கு விட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு குத்தகைதாரருக்கு £20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.மேலும், 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மேல் விசாரணைக்காக கம்பெனிஸ் ஹவுஸுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
தேசியக் குற்றவியல் நிறுவனம் (NCA) மதிப்பிட்டுள்ளபடி, ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டனில் குறைந்தபட்சம் £12 பில்லியன் (சுமார் ₹12000 கோடி) கிரிமினல் பணம் உருவாக்கப்படுகிறது. இந்தப் பணம் பொதுவாக நாட்டை விட்டுச் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது அல்லது குற்றச் செயல்களுக்கு மீண்டும் பயன்படுத்தப்படுவது வழக்கம். பிரிட்டனின் வீதிகளைப் பாதுகாப்பற்றதாகவும், பொருளாதாரத்தை பலவீனப்படுத்துவதாகவும் இருக்கும் இதுபோன்ற பொருளாதாரக் குற்றங்களைக் களைய நடத்தப்பட்ட மிகப் பெரிய நடவடிக்கை இதுவாகும்.