‘கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படும் கேரளாவில், கடந்த சில மாதங்களாக ‘மூளையைத் தின்னும் அமீபா’ (Brain-eating Amoeba) நோய் வேகமாகப் பரவி வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த ஐந்து நாட்களில் மட்டும் இந்நோயால் நான்கு பேர் உயிரிழந்திருப்பது, நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது.
நிபா வைரஸ், கொரோனா, பன்றிக் காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்ப் பரவல்களைக் கண்ட கேரளாவில், தற்போது இந்த அரிதான அமீபா நோய் அச்சுறுத்தி வருகிறது.
இதுவரை கேரளா மாநிலத்தில் சுமார் 200 பேர் இந்த அமீபா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகக் கேரள மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயன் உள்ளிட்ட 4 பேர் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மூளையைத் தின்னும் அமீபா (நெக்லேரியா ஃபோவ்லெரி – Naegleria fowleri) குறித்து மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் மக்களுக்குப் பின்வரும் எச்சரிக்கைகளையும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர்:
இந்த அமீபா பெரும்பாலும் மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையைப் பாதிக்கிறது.
மக்கள் மாசுபட்ட நீர்நிலைகள் அல்லது குளோரின் கலக்கப்படாத நீர்நிலைகளில் குளிக்கும்போது இந்த அமீபா தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
-
- முடிந்தவரை அசுத்தமான நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- முகம் கழுவுதல், வாய் கொப்பளித்தல் மற்றும் மூக்கைத் துடைப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையும் (Purified Water) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- சுகாதாரத் துறை வெளியிடும் அறிவிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
சுகாதாரத் துறை அதிகாரிகள் நிலைமையைக் கூர்ந்து கண்காணித்து வருகின்றனர். மக்கள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.