Posted in

சுற்றுலாத் தீவில் பதற்றம்: பாதசாரிகள் மீது கார் மோதியதில் 10 பேர் காயம்; ஓட்டுநர் கைது!

பிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான இலே டி ஒலெரோன் (Île d’Oléron) தீவில், ஓட்டுநர் ஒருவர் தனது காரை வேண்டுமென்றே பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் மீது மோதியதில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, அந்த ஓட்டுநரைப் பொலிஸார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒலெரோன் தீவில் உள்ள செயின்ட்-பியர் டி ஒலெரோன் (Saint-Pierre d’Oléron) மற்றும் டாலஸ் டி ஒலெரோன் (Dolus d’Oléron) ஆகிய பகுதிகளுக்கு இடையேயான பிரதான சாலையில் இந்தச் சம்பவம் நேற்றையதினம் காலையில் நிகழ்ந்துள்ளது.

உள்ளூர் அரசு வழக்கறிஞர் அர்னாட் லரைஸ் (Arnaud Laraize) அளித்த தகவல்படி, 35 வயதுடைய அந்த நபர் “வேண்டுமென்றே பல பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் மீது மோதியுள்ளார்”.

இதில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் முடிவில், சந்தேக நபர் தனது காருக்குத் தீ வைக்க முயற்சித்துள்ளார். அப்போது பொலிஸார் டெசர் (Taser) துப்பாக்கியைப் பயன்படுத்தி அவரைச் சுற்றிவளைத்து கைது செய்தனர். கைது செய்யப்படும்போது அவர் அரபு மொழியில் “அல்லாஹு அக்பர்” என்று கத்தியதாக உள்ளூர் மேயர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மீது “கொலை முயற்சி” (attempted murder) பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அவரது செயல் தீவிரவாத நோக்கம் கொண்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை. பிரான்ஸின் தீவிரவாத தடுப்புப் பிரிவு வழக்கறிஞர் அலுவலகம் (Anti-terrorism prosecutor’s office) தற்போது விசாரணையில் ஈடுபடவில்லை, ஆனால் நிலைமையைக் கண்காணித்து வருகிறது.

அந்த சந்தேக நபர் அதே தீவில் வசிப்பவர் என்றும், மது மற்றும் போதைப்பொருள் தொடர்பான சிறு குற்றங்களுக்காகப் பொலிஸாரால் அறியப்பட்டவர் என்றும், தீவிரவாத கண்காணிப்புப் பட்டியலில் அவர் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ் (Laurent Nunez) இந்தச் சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைவதாகக் கூறி, உடனடியாகச் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.