Posted in

கொடூரமான இன அழிப்பு: செயற்கைக்கோள் படங்களே சாட்சி!

டார்பர் பிராந்தியத்தில் சூடானிய இராணுவத்தின் கடைசி கோட்டையாக இருந்த எல்-ஃபாஷர் நகரை RSF (துரித ஆதரவுப் படைகள்) கைப்பற்றியதையடுத்து, அங்கே பெரும் மனிதப் படுகொலைகள் நடந்ததற்கான அதிர்ச்சியூட்டும் ஆதாரங்களை யேல் பல்கலைக்கழகத்தின் மனிதநேய ஆய்வகம் (Yale Humanitarian Research Lab – HRL) வெளியிட்டுள்ளது.

யேல் ஆய்வகம் வெளியிட்ட அறிக்கையின்படி, RSF படைகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததற்கான ஆதாரங்கள் செயற்கைக்கோள் படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன:

  • சடலங்கள் குவியல்: RSF வாகனங்களுக்கு அருகில், தரையில் மனித உடல்களின் அளவிற்கு ஒத்த பொருள்கள் காணப்படுகின்றன.
  • இரத்தக் கறை: RSF படையினர் இருந்த இடங்களில் சிவப்பு நிறத்தில் மண்ணின் நிறமாற்றம் பல இடங்களில் காணப்படுகிறது, இது உடல்களைப் புதைத்ததற்கான சாத்தியமான அடையாளங்களாக உள்ளன.
  • வீடு வீடாகத் தேடுதல் வேட்டை: நகரத்தின் டாரஜா ஊலா (Daraja Oula) பகுதியில், RSF வாகனங்கள் தெருக்களை மறித்து, வீடு வீடாகச் சென்று மக்களைத் துடைத்தழிக்கும் (house-to-house clearance operations) பாணியில் செயல்பட்டதற்கான தெளிவான இராணுவ அமைப்புகளைச் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

யேல் ஆய்வகத்தின் செயல் இயக்குனர், எல்-ஃபாஷரில் நடப்பது ருவாண்டா இனப்படுகொலையின் முதல் 24 மணி நேர வன்முறைக்கு நிகரானது என்று எச்சரித்துள்ளார்.

இந்த அறிக்கையின்படி, எல்-ஃபாஷர் நகரத்தில், ஃபர், ஜகாமா மற்றும் பெர்டி (Fur, Zaghawa, and Berti) போன்ற அரபு அல்லாத பூர்வீக சமூகங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுதல் மற்றும் சுருக்கமான மரணதண்டனைகள் மூலம் முறையான மற்றும் வேண்டுமென்றே செய்யப்பட்ட இனச் சுத்திகரிப்பு (ethnic cleansing) நடந்து வருவதாகத் தெரிகிறது.

எல்-ஃபாஷரின் வீழ்ச்சி, சூடான் போரில் ஒரு கொடூரமான திருப்புமுனையாக மாறியுள்ளதுடன், டார்பர் பிராந்தியத்தில் RSF-ன் முழுமையான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் உதவி இல்லாமல் நகரத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.