லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள சிடோன் நகருக்கு அருகிலுள்ள ஐன் அல்-ஹில்வே (Ain al-Hilweh) பாலஸ்தீனிய அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
இந்தத் தாக்குதல் நேற்று நடந்தது. இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்தம் ஏற்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு லெபனானில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.
-
இஸ்ரேலிய இராணுவம் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. ஐன் அல்-ஹில்வே பகுதியில், இஸ்ரேலிய துருப்புக்களுக்கு எதிராகவும், இஸ்ரேல் அரசுக்கு எதிராகவும் பயங்கரவாத தாக்குதல்களைத் திட்டமிடுவதற்கும் நடத்துவதற்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்திய பயிற்சி வளாகத்தை தாக்கியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
-
ஆனால், ஹமாஸ் அமைப்பு இந்தக் கூற்றை மறுத்துள்ளது. தாக்கப்பட்ட இடம் தங்களது பயிற்சி வளாகம் அல்ல என்றும், அது முகாமில் வசிப்பவர்களால் பயன்படுத்தப்படும் திறந்த விளையாட்டு மைதானம் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. அத்துடன், லெபனானில் உள்ள பாலஸ்தீனிய அகதிகள் முகாம்களில் இராணுவத் தளங்கள் எதுவும் இல்லை என்றும் ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை லெபனானிய அரசியல் கட்சியும், போராளிக் குழுவுமான ஹிஸ்புல்லாவும் கண்டித்துள்ளது.