பிரிட்டனில் பயணிகள் ரயில் ஒன்றில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரு பிரிட்டன் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லண்டன் கிங்ஸ் கிராஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில், கேம்பிரிட்ஜ்ஷைரில் உள்ள ஹண்டிங்டன் என்ற இடத்தின் அருகே, கடந்த சனிக்கிழமை மாலை இந்தத் தாக்குதல் நடந்தது.
தாக்குதல் குறித்த தகவல் கிடைத்த எட்டு நிமிடங்களுக்குள் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் ரயிலுக்குள் சென்று இரு சந்தேக நபர்களைக் கைது செய்தனர். அவர்கள் இருவரும் 32 மற்றும் 35 வயதுடைய பிரிட்டனில் பிறந்த பிரிட்டன் குடிமக்கள் ஆவர்.
மொத்தமாக 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவர் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ரயிலில் இருந்த பயணிகள், கத்தியுடன் ஒருவர் ஓடி வருவதைப் பார்த்து பதற்றத்துடன் ஓடி ஒளிந்ததாகவும், ரயிலின் இருக்கைகள் முழுவதும் இரத்தம் இருந்ததாகவும் விவரித்துள்ளனர்.
பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறையின் கண்காணிப்பாளர் ஜான் லவ்லெஸ் இதுகுறித்துத் தெரிவிக்கையில்:
“இந்தத் தருணத்தில், இது ஒரு பயங்கரவாதச் சம்பவம் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை,” என்று அவர் உறுதிப்படுத்தினார். சம்பவத்திற்கான முழு சூழ்நிலையையும் நோக்கத்தையும் கண்டறிய விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்தச் சம்பவத்தைக் “கடுமையான” மற்றும் “ஆழ்ந்த கவலையளிக்கும்” சம்பவம் என்று கண்டித்துள்ளார்.