உலகையே உலுக்கிய இரண்டு 737 மேக்ஸ் விமான விபத்துகள் (737 MAX crashes) தொடர்பான போயிங் (Boeing) நிறுவனத்தின் மீதான கிரிமினல் மோசடி வழக்கை (Criminal Fraud Case) கைவிட அமெரிக்க நீதித்துறை எடுத்த முடிவுக்கு, அந்நாட்டு நீதிபதி தற்போது அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்க நீதித்துறையின் (DOJ – Department of Justice) இந்த முடிவால், விமான விபத்தில் பலியான 346 பேரின் குடும்பங்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கடும் அதிருப்தியும், ஆவேசமும் அடைந்துள்ளனர்.
பல ஆயிரம் கோடி அபராதம்… ஆனால் தண்டனை இல்லை!
போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு, அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான FAA-ஐ வேண்டுமென்றே தவறாக வழிநடத்தியதாகப் போயிங் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
- விசாரணையின் முடிவில், போயிங் நிறுவனம் பல பில்லியன் டாலர்கள் அபராதம் மற்றும் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்ட போதிலும், கிரிமினல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது.
- இந்த முடிவின் மூலம், போயிங் ஒரு கிரிமினல் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதில் இருந்து தப்பியுள்ளது.
நீதி மறுக்கப்பட்டதாகக் குடும்பங்கள் கொந்தளிப்பு!
“அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் கொடிய பெருநிறுவனக் குற்றம்” என்று வர்ணிக்கப்பட்ட இந்த வழக்கை, ஒரு கிரிமினல் தீர்ப்பு இல்லாமல் முடித்து வைப்பது, நீதிக்கு எதிரானது என விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“பணம் கொடுத்துத் தண்டனையை வாங்க முடியும் என்ற அபாயகரமான செய்தியை இந்தத் தீர்ப்பு உலகிற்கு அனுப்புகிறது. 346 உயிர்களைக் கொன்றதற்குப் பொறுப்புக் கூறாமல், போயிங் தப்பியுள்ளது,” என அவர்கள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.
நீதிபதி இந்த ஒப்புதலை வழங்கியிருந்தாலும், இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் பலியானவர்களின் குடும்பங்கள் தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.