Posted in

வவுனியாவில் பொலிஸ் அட்டகாசம்: கொந்தளித்த மக்கள்; கொழுந்துவிட்ட போராட்டம்!

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்து பொலிஸார் துரத்திச் சென்றமையால் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டது.

நேற்று இரவு 10 மணியளவில் கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்துள்ளனர். அப்போது, அந்த வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த ஒருவரைப் பொலிஸார் துரத்திச் சென்றதாகவும், அவரது வாகனச் சக்கரத்தில் (டயர்) தடியால் தடையை ஏற்படுத்தியதாகவும் ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதை நேரில் கண்ட இளைஞர்களும் ஊர்மக்களும் பெரும் ஆத்திரமடைந்தனர். அவர்கள் பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர். இந்த அடாவடிச் செயற்பாட்டுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரிய பொதுமக்கள், ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை நீண்டநேரம் சிறைப்பிடித்து வைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

உயிரிழந்தவரின் சடலத்தை அப்புறப்படுத்த பொதுமக்கள் மறுப்புத் தெரிவித்தனர். நீதிபதி சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணை நடத்திய பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம் என அவர்கள் விடாப்பிடியாகக் கூறினர். இதனால் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மக்களின் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் திணறினர்.

இந்த நிலையில், வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தார். இந்த மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து, அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விசாரிப்பதாக அவர் பொதுமக்களிடம் உறுதியளித்தார். அத்துடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

எனினும், பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி பொதுமக்கள் நீதிபதி சம்பவ இடத்திற்கு வரவேண்டும் என்பதில் உறுதியாக நின்றனர். இதனால் அப்பகுதியில் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.

பின்னர், திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டார். பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியபோதிலும், சடலம் அந்தப் பகுதியிலிருந்து அகற்றப்பட்டு பொலிஸாரின் வாகனத்தில் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. சடலம் அகற்றப்பட்டபோதும், பொதுமக்கள் பொலிஸாருடன் தொடர்ந்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்தவர் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இராமசாமி அந்தோணிப்பிள்ளை (வயது 58) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சடலத்திற்குக் அருகில், ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் பெயர் பொறிக்கப்பட்ட இலட்சனை (பேட்ஜ்) ஒன்றும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன், விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகத்தடுப்புப் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

Exit mobile version