‘விடுதலைப் பெருவிருட்சம் வேரூன்றித் தளைத்திட ஒரு குவளை நீர் உவந்து உறவுகளை விடுவிப்போம்’ எனும் தொனிப்பொருளில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் நூதனப் போராட்டம் ஒன்று நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு முன்னெடுத்துள்ளது.
தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன், 17 வயதில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். மகனின் நீண்ட பிரிவுத்துயர் தாங்காது, அவரது தாய் தந்தை இருவரும் உயிரிழந்தனர். பெற்றவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு ஒரு ஆயுள் தண்டனைக் கைதியாக, கைவிலங்குடன் கொண்டுவரப்பட்டு, சிதைகளுக்குக் கொள்ளியிட்ட பின்பு மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார் பார்த்தீபன்.
இன்று, பார்த்தீபனின் தாயாரான அமரர் விக்னேஸ்வரநாதன் வாகீஸ்வரி அம்மையாரின் மூன்றாமாண்டு நினைவேந்தல் நாளாகும். இதையொட்டி, யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில், பார்த்தீபன் உள்ளிட்ட சக தமிழ் அரசியல் கைதிகள் உயிர்ப்புடன் விடுதலை பெற்று குடும்பங்களுடன் இணைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினரால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தின் உற்ற உறவுகளை இழந்தும், பிரிந்தும், நீண்டகாலமாக அடிமைச் சிறை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்ப்புடனான விடுதலையை வலியுறுத்தும் முகமாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த மனிதநேயப் பணியில், இனம், மதம், மொழி கடந்து நல்லுள்ளம் கொண்ட அனைவரும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் இருந்து ஒரு குவளைத் தண்ணீரை பொதுக் குவளைக்கு வழங்குவதன் மூலம், நாட்டப்படும் ‘விடுதலைப் பெருவிருட்சம்’ வேரூன்றி தளைத்திடத் தங்கள் பங்களிப்பை அர்ப்பணிக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.