என்ன நாடகமடா? பராசக்தி படம் வெளிவருவதில் சென்சார் சிக்கலாம். திமுக தில்லு முள்ளு
‛பராசக்தி’ வெளியாவதில் சிக்கல்: 15 இடங்களில் 'கட்' செய்ய சென்சார் போர்டு கெடுபிடி - இயக்குநர் சுதா கொங்கரா அதிரடி முடிவு!
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‛பராசக்தி' திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே பெரும் சர்ச்சையைச் சந்தித்துள்ளது. தமிழக வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வான 'இந்தி எதிர்ப்பு போராட்டத்தை' மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன் மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரும் ஜனவரி 10-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தணிக்கை வாரியம் (CBFC) விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் படக்குழுவினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படத்தைப் பார்த்த தணிக்கை வாரிய உறுப்பினர்கள், ஏற்கனவே சில காட்சிகளை நீக்கச் சொன்ன நிலையில், தற்போது கூடுதலாக 15 இடங்களில் 'கட்' செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். படத்திற்கு 'யு/ஏ' (U/A) சான்றிதழ் வழங்கப்பட வேண்டுமென்றால் இந்த மாற்றங்களைச் செய்தே தீர வேண்டும் என்று பிடிவாதம் காட்டுகின்றனர். ஆனால், இந்த 15 காட்சிகளும் படத்தின் கதையோட்டத்திற்கு மிக முக்கியமானவை என்றும், இவற்றை நீக்கினால் படத்தின் சுவாரசியமும் படைப்பின் நோக்கமும் சிதைந்துவிடும் என்றும் இயக்குநர் சுதா கொங்கரா தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தணிக்கை வாரியத்தின் இந்த திடீர் கெடுபிடியால், திட்டமிட்டபடி ஜனவரி 10-ம் தேதி படம் வெளியாகுமா என்பதில் பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது. தணிக்கை வாரியத்தின் பரிந்துரையை ஏற்க மறுத்துள்ள இயக்குநர், படத்தை 'மறுஆய்வுக் குழுவுக்கு' (Revising Committee) அனுப்பத் தீர்மானித்துள்ளார். ஒரு திரைப்படம் மறுஆய்வுக் குழுவின் பார்வைக்குச் சென்றால், அதன் முடிவுகள் வரக் குறைந்தபட்சம் 2 முதல் 3 வாரங்கள் வரை காலம் எடுக்கும். இதனால் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது அரசியல் ரீதியாக மிகவும் உணர்ச்சிகரமான விஷயம் என்பதால், மத்திய அரசின் கீழ் செயல்படும் தணிக்கை வாரியம் திட்டமிட்டே முட்டுக்கட்டை போடுகிறதோ என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் படத்தைக் கொண்டு வரப் படக்குழுவினர் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்களும் இந்தச் சிக்கலால் கவலையில் உள்ளனர். விரைவில் ஒரு சுமுக முடிவு எட்டப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
