GO BACK

கேரளாவை உலுக்கிய வீடியோ விவகாரம்: தற்கொலைக்குத் தூண்டிய ஷிம்ஜிதாவிற்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளாவில் கடந்த மாதம் பேருந்து பயணத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் ஒரு பொய்யான பாலியல் புகார், ஒரு அப்பாவி வாலிபரின் உயிரைப் பறித்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷிம்ஜிதா (Shimjitha) என்பவருக்கு, தற்போது நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கடந்த மாதம் ஷிம்ஜிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், பேருந்தில் பயணம் செய்தபோது தீபக் என்ற நபர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கண்ணீருடன் குற்றம் சாட்டினார். இந்த வீடியோ மின்னல் வேகத்தில் வைரலாகி, தீபக் மீது சமூக வலைதளங்களில் கடும் வசவுச் சொற்கள் வீசப்பட்டன. இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக், தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

தீபக்கின் மரணத்திற்குப் பிறகு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஷிம்ஜிதா வெளியிட்ட புகார் முற்றிலும் பொய்யானது என்பது தெரியவந்தது. தனது சமூக வலைதளப் பக்கத்தின் பார்வைகளை (Views) அதிகரிக்கவும், பிரபலமடையவும் திட்டமிட்டே அவர் தீபக் மீது அபாண்டமான பழி சுமத்தியது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து, தீபக்கின் மனைவி மற்றும் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாக ஷிம்ஜிதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்படுவதற்கு அஞ்சித் தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதாவைக் கேரளா போலீசார் ஒருவழியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் சுமார் 21 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், தற்போது நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், சாட்சிகளைக் கலைக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், "ஒரு உயிரைப் பறித்த பெண்ணிற்கு இவ்வளவு சீக்கிரம் ஜாமீன் வழங்கக் கூடாது" என்று தீபக்கின் குடும்பத்தினரும் பொதுமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.