Posted in

15 ஆயிரம் பேரை கொல்ல சதி? மொஹரம் ஊர்வலத்தில் விஷ மாத்திரை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பைகுல்லா (Byculla) பகுதியில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தின் போது, சுமார் 15,000 பேருக்கு விஷ மாத்திரைகளை விநியோகித்துக் கொடூரமான முறையில் கூட்டாகக் கொல்ல முயன்ற திடுக்கிடும் சதித் திட்டத்தை மும்பை போலீசார் முறியடித்துள்ளனர். இந்த விபரீத செயலில் ஈடுபட்ட புனேவைச் சேர்ந்த பிபிஏ (BBA) பட்டதாரியான பயாஸ் பிரேம்ஜி (39) என்ற நபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து மனித உயிர்களைப் பறிக்கக்கூடிய 14,900 நச்சு மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷியா பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்ற மொஹரம் ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்ட பயாஸ் பிரேம்ஜி, அங்கிருந்தவர்களிடம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணிகள் (Painkillers) என்று பொய் கூறி மர்மமான மாத்திரைகளை விநியோகித்து வந்துள்ளார். இதனை உட்கொண்ட சல்மான் சையத் உள்ளிட்ட சிலருக்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் கடுமையான வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதற்கிடையே, கூட்டத்தில் இருந்த மூன்று பெண் தன்னார்வலர்கள் அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து அவரைத் தடுத்து நிறுத்திப் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த பைகுல்லா போலீசார் பயாஸ் பிரேம்ஜியைக் கைது செய்து அவரிடமிருந்த மாத்திரைகளைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஆன்லைன் மூலம் 30,000 காலி கேப்சூல்களையும், எலி விஷத்திற்குப் பயன்படுத்தப்படும் 50 கிலோ ‘சிங்க் பாஸ்பைடு’ (Zinc Phosphide) என்ற உயிர்க்கொல்லி வேதிப்பொருளையும் வாங்கி, தனது ஹோட்டல் அறையிலேயே வைத்து இந்த விஷ மாத்திரைகளைத் தயாரித்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். குறைந்தது 15,000 பேரைக் கொல்ல திட்டமிட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கைதான பயாஸ் பிரேம்ஜி கடந்த சில ஆண்டுகளில் ஈரான் மற்றும் ஈராக் நாடுகளுக்குப் பலமுறை சென்று வந்துள்ளதால், இதன் பின்னணியில் சர்வதேசச் சதி ஏதேனும் உள்ளதா அல்லது பயங்கரவாத அமைப்புகளின் தூண்டுதல் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். எனினும், மனைவியைப் பிரிந்ததால் ஏற்பட்ட கடுமையான மனச்சோர்வு காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்தாரா என்றும் ஆராயப்பட்டு வருகிறது. தற்போது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 123 (விஷம் கொடுத்துக் காயம் ஏற்படுத்துதல்) மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து மும்பை மத்திய குற்றப்பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.