Posted in

மிகக் கொடூரமான மரணத்தை விளைவிக்கக் கூடிய தவளையை பயன்படுத்தியதா ரஷ்யா ?

மிகக் கொடூரமான மரணத்தை விளைவிக்கக் கூடிய தவளையை பயன்படுத்தியதா ரஷ்யா ? - Image 1

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி, சிறையில் இருந்தபோது தென் அமெரிக்காவின் அரிய வகை விஷத் தவளைகளிலிருந்து எடுக்கப்படும் ‘எபிபாடிடின்’ (Epibatidine) என்ற நச்சு மூலம் கொல்லப்பட்டதாகப் பிரிட்டன் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டணிக் நாடுகள் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளன. நாவல்னியின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஐரோப்பிய ஆய்வகங்களில் சோதனை செய்ததில், இந்த உயிருக்கு ஆபத்தான நரம்பு மண்டல நச்சு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொபைல் போன் திரையை விடச் சிறியதான இந்தத் தவளைகளின் விஷம், மனித உடலில் பக்கவாதம் மற்றும் சுவாசத் தடையை ஏற்படுத்தி மிகக் கொடூரமான மரணத்தை விளைவிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் யுவெட் கூப்பர் (Yvette Cooper) இது குறித்துப் பேசுகையில், “நாவல்னியை மௌனமாக்க ரஷ்ய அரசு மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான முயற்சி இது” என்று கடுமையாகச் சாடியுள்ளார். இந்த விஷம் ரஷ்யாவில் இயற்கையாகக் கிடைக்கக்கூடியது அல்ல என்றும், திட்டமிட்டு ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். நாவல்னி ரஷ்யாவின் பாதுகாப்பான சிறையில் இருந்ததால், அவருக்கு இந்த விஷத்தை அளிக்க ரஷ்ய அரசுக்கு மட்டுமே வாய்ப்பும், உள்நோக்கமும் இருந்ததாகப் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை (Sanctions) விதிக்கப் பிரிட்டன் ஆலோசித்து வருகிறது. நாவல்னிக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட இந்த நச்சு, சர்வதேச வேதியியல் ஆயுதத் தடைச் சட்டத்தை (Chemical Weapons Convention) மீறிய செயலாகும். எனவே, இது குறித்து ‘வேதியியல் ஆயுதத் தடுப்பு அமைப்புக்கு’ (OPCW) முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2018-ல் பிரிட்டனில் நடந்த நோவிசோக் நச்சுத் தாக்குதல் மற்றும் 2020-ல் நாவல்னிக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட விஷம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இதனை “மேற்கத்திய நாடுகளின் பொய்ப் பிரசாரம்” என்று வர்ணித்துள்ள ரஷ்யத் தூதரகம், நாவல்னி இயற்கை காரணங்களாலேயே உயிரிழந்ததாக மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளது. ஆய்வக சோதனை முடிவுகள் முழுமையாக வெளியிடப்பட்ட பின்னரே இது குறித்துக் கருத்து தெரிவிக்க முடியும் என ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா சகரோவா கூறியுள்ளார். நாவல்னியின் இரண்டாவது நினைவு தினத்திற்கு முன்னதாக வெளியாகியுள்ள இந்தத் தகவல் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *