தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களில் சுமார் 40 சதவீதம் பேர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள் என்ற புள்ளிவிவரத்தை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வரும் இவர்களுக்கு இன்னும் முறையான சட்ட அங்கீகாரம் கிடைக்காதது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 2003-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம், மனிதாபிமான அடிப்படையில் வந்தவர்களைப் பாதித்துள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
முதல்வர் முன்வைத்துள்ள 4 முக்கிய கோரிக்கைகள்:
-
இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குவதற்குத் தடையாக இருக்கும் பழைய நிர்வாக உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.
-
தமிழக அரசு வழங்கியுள்ள அடையாள அட்டைகளை அடிப்படையாகக் கொண்டு, கடவுச்சீட்டு (Passport) மற்றும் விசா கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க வேண்டும்.
-
குடியுரிமை விண்ணப்பங்களை மாவட்ட அளவிலேயே விரைவாகப் பரிசீலிக்க அதிகாரத்தை அதிகாரிகளுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
-
ஜனவரி 9, 2015-க்கு முன்பாக இந்தியா வந்து பதிவு செய்துள்ள இலங்கைத் தமிழர்களின் சட்டப்பூர்வ நிலையைத் தெளிவுபடுத்தி, அவர்களைச் சட்டவிரோத குடியேறிகளாகக் கருதக் கூடாது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் ‘உலகநாதன் vs இந்திய அரசு’ (2019) வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ள முதலமைச்சர், இத்தகைய விவகாரங்களில் சட்டத்தை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்று கோரியுள்ளார். மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்து, பல தசாப்தங்களாக நிலவும் சட்ட நிச்சயமற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் எனத் தான் நம்புவதாகவும் அவர் தனது கடிதத்தில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
