இந்திய சமூக ஊடக உலகையே உலுக்கியுள்ள ஒரு அதிரடிச் செய்தியாக, அமெரிக்காவின் மார்க் ஜுக்கர்பர்க்கிற்குச் சொந்தமான ‘மெட்டா’ (Meta) நிறுவனத்திற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மிகக் கடுமையான நோட்டீஸ்களை அனுப்பி சம்மன் அனுப்பியுள்ளது. இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் கட்டண விளம்பரங்கள் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சர்ச்சைக்குரிய மற்றும் சட்டவிரோதமான உள்ளடக்கங்கள் (CSEAM) பரவுவது குறித்தும், வாட்ஸ்அப்பில் (WhatsApp) வரவிருந்த புதிய ‘User Name’ அம்சம் சைபர் மோசடிகளுக்கு வழிவகுக்கும் என்பது குறித்தும் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் கொடூரம்: 7 நாட்கள் கெடு விதித்த மத்திய அரசு! சமீபத்தில் பிபிசி (BBC) ஊடகம் நடத்திய அதிரடிப் புலனாய்வில், இன்ஸ்டாகிராம் தளத்தில் சிறுமிகள் மற்றும் குழந்தைகளின் ஆபாச உள்ளடக்கங்களை விற்பனை செய்யும் டெலிகிராம் (Telegram) லிங்க்குகள், அதிகாரப்பூர்வ கட்டண விளம்பரங்களாக (Paid Ads) ஓடிக்கொண்டிருப்பது அம்பலமானது. வெறும் 99 ரூபாய்க்கு இந்தக் கொடூரமான வீடியோக்கள் விற்கப்படுவதும், மெட்டாவின் தானியங்கி விளம்பர அனுமதிக் கொள்கை (AI Ads Review) இதனைத் தடுக்கத் தவறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, மத்திய அரசு மெட்டா நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், இத்தகைய சட்டவிரோத விளம்பரங்களையும், அவற்றுக்கான வழிகளையும் இன்ஸ்டாகிராம் தளம் உடனடியாக முடக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 7 நாட்களுக்குள் இந்த விளம்பரங்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன, இதற்குப் பின்னால் இருப்பவர்கள் யார் மற்றும் எடுக்கப்பட்ட கணினி வழித் தடுப்பு நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மெட்டா விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், தவறினால் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 (IT Act) மற்றும் ஐடி விதிகள் 2021-ன் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
வாட்ஸ்அப் ‘User Name’ அம்சத்திற்கு தற்காலிகத் தடை! இது ஒருபுறமிருக்க, வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக மொபைல் எண்களைப் பகிராமல், தனித்துவமான ‘User Name’ (பயனர் பெயர்) மூலம் அரட்டை அடிக்கும் புதிய அம்சத்தை அண்மையில் அறிவித்திருந்தது. பயனர்கள் தங்களுக்குரிய பயனர் பெயர்களை முன்பதிவு செய்யவும் அனுமதித்திருந்தது.
இருப்பினும், இந்த அம்சம் இந்தியாவில் ஏற்கனவே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ (Digital Arrest), ஆன்லைன் பண மோசடி, மற்றும் ஆள்மாறாட்ட (Impersonation) குற்றங்களை பன்மடங்கு அதிகரிக்கும் என மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. மோசடிப் பேர்வழிகள் அரசு அதிகாரிகள், வங்கிகள் அல்லது பொது நிறுவனங்களின் பெயர்களில் போலி யூசர் நேம்களை உருவாக்கி, பொதுமக்களை மிக எளிதாக ஏமாற்ற இந்த அம்சம் வழிவகுக்கும் என மத்திய அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக, இந்த ‘User Name’ அம்சத்தை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு (Pause Rollout) மெட்டா நிறுவனத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான முறையான ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பு தணிக்கைகள் முடிந்து, அரசின் முழுமையான திருப்தி ஏற்படும் வரை இந்த அம்சத்தை இந்தியாவில் நேரலையாகக் கொண்டுவரக் கூடாது என திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்திய சட்டங்களின் பிடி இறுகுகிறது! இந்தியாவில் 2027 மே மாதம் முதல் முழுமையாக அமலுக்கு வரவுள்ள ‘டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் 2023’ (DPDP Act)-க்கு முன்னதாகவே, சமூக ஊடக இடைத்தரகர் (Significant Social Media Intermediary) என்ற முறையில் மெட்டா நிறுவனம் தனது தளங்களின் பாதுகாப்புப் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது என அரசு நினைவூட்டியுள்ளது. மெட்டா நிறுவனம் இதற்குப் பாதுகாப்புக் கவசங்கள் இருப்பதாகக் கூறினாலும், இந்தியப் பயனர்களின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என மத்திய அரசு இந்த அதிரடி வேட்டையைத் தொடங்கியுள்ளது.