அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விரிசல்? ஹோர்முஸ் ஜலசந்தியில் அடுத்தடுத்து 3 எரிபொருள் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்! - Athirvu News
Posted in

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விரிசல்? ஹோர்முஸ் ஜலசந்தியில் அடுத்தடுத்து 3 எரிபொருள் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் வெடித்த போரை முடிவுக்குக் கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட தற்காலிக அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire) தற்போது பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்துள்ளது. சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் மிக முக்கியப் பாதையாக விளங்கும் ஹோர்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz), கடந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட எரிபொருள் டாங்கர் கப்பல்கள் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமாமங்கள் (Drone) மூலம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்தத் தாக்குதல் சம்பவங்கள் உலகளவில் கச்சா எண்ணெய் விலையை உடனடியாக 2.6 விழுக்காடு வரை உயர்த்தியுள்ளதுடன், மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றத்தைத் தட்டியெழுப்பியுள்ளது.

பிரிட்டிஷ் ராணுவத்தின் கடல்சார் வர்த்தகப் பாதுகாப்பு அமைப்பான ‘யுகேஎம்டிஓ’ (UKMTO) வெளியிட்டுள்ள அவசர அறிக்கையின்படி, ஓமன் நாட்டு கடற்கரைக்கு அருகே சென்று கொண்டிருந்த கத்தாரின் ‘அல் ரெகாயத்’ (Al Rekayyat) என்ற எல்என்ஜி (LNG) எரிவாயுக் கப்பல் மீது அடையாளம் தெரியாத ஏவுகணை பாய்ந்ததில் கப்பல் தீப்பற்றி எரிந்தது. இதனைத் தொடர்ந்து சில மணி நேர இடைவெளியில், சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான மற்றொரு கச்சா எண்ணெய் கப்பல் உட்பட மேலும் இரண்டு டாங்கர்கள் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகின. இந்தத் தாக்குதல்களில் கப்பல்கள் பலத்த சேதமடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக மாலுமிகள் யாருக்கும் எவ்வித உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஈரானே முழுப் பொறுப்பு என்று அமைதிப் பேச்சுவார்த்தையின் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படும் கத்தார் நாடு அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் சர்வதேசக் கப்பல்கள் ஓமன் நாட்டின் எல்லையை ஒட்டிய புதிய கடல் வழித்தடத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும், தங்களின் ஒப்புதல் பெற்ற பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் ஈரான் கடந்த வாரம் எச்சரித்திருந்தது. ஈரான் விதித்த எச்சரிக்கையை மீறி ஓமன் வழித்தடத்தில் சென்றதாலேயே, கத்தார் மற்றும் சவூதி கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் இந்தத் துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் முடிவடைந்த சில நாட்களிலேயே இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போரைத் தொடங்குவதாக மிரட்டல் விடுப்பதை நிறுத்தினால் மட்டுமே அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியம் என ஈரான் பிடிவாதம் காட்டி வரும் சூழலில், ஹோர்முஸ் ஜலசந்தியில் நிகழ்ந்துள்ள இந்தத் தாக்குதல்கள் அமெரிக்க-ஈரான் இடையே எட்டப்பட்ட 60 நாட்கள் தற்காலிக ஒப்பந்தத்தை முழுமையாக முறிக்கும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *