Posted in

இனி அரசு மருத்துவமனையில் க்யூவில் நிற்க வேண்டாம்! நலம் AI வாட்ஸ்அப் சேவை அறிமுகம்..!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்தி, பொதுமக்களுக்கான சேவைகளை எளிதாக்கும் நோக்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஒரு புரட்சிகரமான டிஜிட்டல் தொழில்நுட்பப் புதிய வசதியைத் தொடங்கியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் (RGGGH) இன்று நடைபெற்ற அதிகாரப்பூர்வ நிகழ்வில், உரையாடலுடன் வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான “நலம் AI” (Nalam AI) வாட்ஸ்அப் சாட்பாட் (WhatsApp Chatbot) சேவையை மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே. ஜி. அருண்ராஜ் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் பொதுமக்கள் இனி காலையிலேயே அரசு மருத்துவமனைகளில் ஓபி (OP) சீட்டு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்துக் கிடக்க வேண்டிய அவசியமில்லை என்ற நற்செய்தியை அமைச்சர் பகிர்ந்துள்ளார்.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் நேரடி வழிகாட்டுதலின்படி, நமது மாநிலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஹெல்த் மிஷன் இத்தொழில்நுட்பத்தை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களது மொபைல் போனில் 96192 22999 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணைச் சேமித்துக்கொண்டு, ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் வீட்டிலிருந்தபடியே தங்களின் ஓபி அப்பாயிண்ட்மென்ட்களை (OP Appointment) எளிதாக முன்பதிவு செய்துகொள்ளலாம். முதற்கட்டமாகச் சென்னை அரசு பொது மருத்துவமனையின் நெஞ்சக நோய் பிரிவில் சோதனை (Pilot Basis) அடிப்படையில் இது தொடங்கப்பட்டுள்ளதுடன், விரைவில் 22 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் அருண்ராஜ் விரிவாகப் பேசுகையில், “ஆன்லைனில் முன்பதிவு செய்த நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தவுடன், ‘ஜியோ பென்சிங்’ (Geo-fencing) தொழில்நுட்பத்தின் உதவியோடு தங்களின் வருகையை ஆப்ஷன் மூலம் கிளிக் செய்தவுடன் அவர்களுக்கான டோக்கன் தானாகவே ஜெனரேட் ஆகிவிடும். இதுமட்டுமல்லாமல், நோயாளிகளின் ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட லேப் ரிப்போர்ட்டுகள் (Lab Reports) மற்றும் மருத்துவர்களின் மருந்துச் சீட்டு (Prescription) ஆகிய அனைத்தும் நேரடியாக அவர்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கே வந்துவிடும். தனிநபர் தரவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நோயாளியின் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி (OTP) சரிபார்ப்புக்குப் பிறகே இந்த லேப் அறிக்கைகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும்” என்று விளக்கமளித்துள்ளார்.

ஸ்மார்ட்போன் இல்லாத கிராமப்புற எளிய மக்களின் பயன்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் தங்களின் சாதாரண மொபைல் எண்ணை வைத்தோ, அல்லது தங்களுக்குப் பக்கத்தில் உள்ள ‘இ-சேவை’ மையங்கள் மூலமாகவோ முதல் நாளே மிக எளிதாக முன்பதிவு செய்துகொள்ளலாம். அதே நேரத்தில், இந்த வாட்ஸ்அப் சாட்பாட் கட்டாயமான ஒன்றல்ல; போன் இல்லாத ஏழை எளிய மக்கள் எவ்வித முன்பதிவும் இன்றி எப்போதும் போல நேரடியாக அரசு மருத்துவமனைகளுக்கு வந்து வழக்கமான முறையிலும் தடையின்றித் தரமான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் நிகர்நிலை பல்கலைக்கழக விவகாரத்தில், 7.5% இட ஒதுக்கீட்டையும், ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விக் கட்டணக் கொள்ளையையும் தடுக்கத் தவெக அரசு சட்டரீதியாகத் தொடர்ந்து உறுதியுடன் போராடும் என்றும் அமைச்சர் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *