Posted in

அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்யும் நேரத்தில்.. தமிழக முதலீடுகளைத் தட்டித் தூக்கிய ஆந்திரா!

தமிழ்நாட்டில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசின் தொழில் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனா, மாவட்ட வாரியாக அரசுப் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் ஆங்கிலப் புலமை குறித்துத் தீவிர ஆய்வு நடத்தி வரும் சூழலில், தமிழகத்திற்கு வர வேண்டிய கோடிக்கணக்கான வெளிநாட்டு முதலீடுகள் அண்டை மாநிலமான ஆந்திராவிற்குத் தாரைவார்க்கப்பட்டு வருவது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அண்மையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு வகுப்பறையில் மாணவிகளிடம் அவர் ஆங்கிலத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க முடியாமல் திணறியது குறித்தும், கணினிகள் தூசி படிந்து கிடந்தது குறித்தும் அமைச்சர் கேள்வி எழுப்பிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தின.

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது அவசியம் என்றாலும், மாநிலத்தின் பிரதான பொறுப்பான தொழில் துறையைக் கவனிப்பதிலும், புதிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் தவெக அரசு கோட்டை விட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக, தென் கொரியாவைச் சேர்ந்த முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனமான ‘ஹ்வாஸுங் என்டர்பிரைஸ்’ (Hwaseung Enterprise), தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசுடன் சுமார் ₹1,720 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அமையவிருந்த இந்த மெகா தொழிற்சாலைத் திட்டம், தற்போதைய தவெக ஆட்சியில் நிலவும் உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் சிவப்பு நாடா முறைகள் காரணமாகத் தமிழகத்தை விட்டு முற்றிலும் கைநழுவிப் போயுள்ளது.

தமிழகத்திற்கு வர வேண்டிய இந்த ₹1,720 கோடி கொரிய முதலீட்டை, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு மிகச் சாதுரியமாகத் தனது மாநிலத்திற்குத் தட்டித் தூக்கிச் சென்றுள்ளார். ஆந்திராவுக்குச் சென்றுள்ள இந்த கொரிய நிறுவனம், அங்குள்ள குப்பம் பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று கட்டங்களாகப் பிரம்மாண்ட தொழிற்சாலையை அமைக்க ஆந்திர அரசுடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட ஆந்திர மாநில இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கவுள்ளன. “தொழில் தொடங்கத் தமிழகத்தை விட ஆந்திராவே மிகச் சிறந்த மாநிலம்” என்று அந்த கொரிய நிறுவனம் பகிரங்கமாகத் தெரிவித்துவிட்டு வெளியேறியிருப்பது தமிழகத் தொழில் துறைக்கு விழுந்த பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், தமிழகத்தில் முதலீடுகள் குவிவதாக அரசு செய்து வரும் விளம்பரங்களின் முகமூடி இதன் மூலம் கிழிக்கப்பட்டுள்ளதாகச் சாடியுள்ளனர். மாநிலத்தின் தொழில் துறை அமைச்சர் தனது முதன்மைப் பணியான புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தாமல், பள்ளிக் கல்வித் துறையின் வேலைகளைக் கையில் எடுத்துக்கொண்டு வலம் வருவது நிர்வாகக் குளறுபடியையே காட்டுவதாக அவர்கள் விமர்சித்துள்ளனர். தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் முறையற்ற கமிஷன் கலாச்சாரம் காரணமாகவே சர்வதேச நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்குத் தப்பியோடி வருகின்றன என்றும், இதனால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவு முழுமையாகப் பறிபோயுள்ளதாகவும் அரசியல் அரங்கில் குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *