சூடானில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்குள்ள துணை இராணுவப் படையான ‘ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ்’ (RSF) அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக நிகழ்த்தி வரும் அத்துமீறல்கள் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு (Genocide) இணையானது என்று ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை கண்டறியும் குழு தனது புதிய அறிக்கையில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. வடமேற்கு டார்ஃபர் பிராந்தியத்தில் உள்ள அல்-பாஷிர் (Al-Fashir) நகரைக் கைப்பற்றிய இந்த ஆயுதக் குழு, அங்குள்ள பழங்குடியின மக்களைக் குறிவைத்து ஒட்டுமொத்தமாக அழிக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ.நா அதிகாரிகள் திரட்டிய சான்றுகளின்படி, அல்-பாஷிர் நகரில் கடந்த சில மாதங்களாகப் பெண்கள் மற்றும் சிறுமிகள் முறையான திட்டமிடலுடன் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்ட தங்களின் கணவர்கள் மற்றும் குடும்பத்தினரின் உடல்களுக்கு மத்தியிலேயே பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மேலும், ஏழு வயதுச் சிறுமிகள் முதல் கர்ப்பிணிகள் வரை இந்த கொடூரத் தாக்குதல்களுக்குத் தப்பவில்லை என அந்த அறிக்கை விவரிக்கிறது.
இராணுவத் தாக்குதல்கள் ஒருபுறமிருக்க, மக்களைக் கொன்று குவிக்கப் ‘பட்டினி’ ஒரு கொடிய ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது. அல்-பாஷிர் நகரை நீண்ட நாட்களாகச் சூழ்ந்து முற்றுகையிட்ட ஆர்.எஸ்.எஃப் படையினர், அங்குள்ள மக்களுக்குக் கிடைக்கும் உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை முற்றிலும் தடுத்து நிறுத்தியுள்ளனர். முறையான உணவு மற்றும் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் நிவாரணப் பொருட்கள் கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் மடியும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அல்-பாஷிர் நகரைத் தொடர்ந்து, தற்போது அல்-ஒபைத் (Al-Obeid) நகரிலும் இதேபோன்றதொரு மனிதநேயமற்ற பேரழிவு பரவி வருவதாக ஐ.நா எச்சரித்துள்ளது. இந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைக் குற்றங்களுக்குக் காரணமான தலைவர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வலியுறுத்தியுள்ளார். உலக நாடுகள் உடனடியாகத் தலையிடாவிட்டால் சூடானில் மனிதகுல வரலாற்றின் மிக மோசமான இனம் சார்ந்த பேரழிவு அரங்கேறும் என சர்வதேச சமூகம் அச்சம் தெரிவித்துள்ளது.