Posted in

நாங்கள் தன்னிச்சையாகத்தான் விலகினோம்! பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரிடம் 4 முன்னாள் எம்எல்ஏக்கள் நேரில் அதிரடி விளக்கம்!

அதிமுகவிலிருந்து விலகி ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேர் மீதான கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட தகுதிநீக்க மனுக்கள் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் முன்னிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று (ஜூலை 9) நேரில் ஆஜராகி இரண்டாவது முறையாகத் தங்களது விளக்கங்களை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பித்தனர். இந்த உயர் மட்ட விசாரணை அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

கடந்த மே 13 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக கொறாடாவின் உத்தரவை மீறி 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதன்பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட சமரச முயற்சிகளை ஏற்று 21 எம்எல்ஏக்கள் மீண்டும் தாய் கழகத்திற்குத் திரும்பியதால் அவர்கள் மீதான நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. ஆனால், அதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வமாகப் பதவி விலகி தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏக்களான எஸ். ஜெயக்குமார் (பெருந்துறை), பி. சத்தியபாமா (தாராபுரம்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய நால்வர் மீதான தகுதிநீக்க நடவடிக்கை மட்டும் தொடர்ந்து நிலுவையில் வைக்கப்பட்டது.

இந்த விசாரணையின் போது பேரவைத் தலைவரை நேரில் சந்தித்த முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களின் விளக்கங்களை அளித்தனர். கடந்த வாரம் இசக்கி சுப்பையா தனது தரப்பு விளக்கத்தைக் கூறியிருந்த நிலையில், நேற்று எஞ்சிய மூவரும் ஆஜராகினர். விசாரணையின் போது, “அதிமுக கொறாடா யார் என்பதில் அப்போது பெரும் குழப்பம் நீடித்ததால், கட்சியின் தெளிவான வழிகாட்டுதல் இன்றி தவெக அரசை ஆதரித்து வாக்களித்தோம்; அதன் பிறகு யாருடைய வற்புறுத்தலும் இன்றி, தங்களின் சொந்த விருப்பத்தின் (Voluntarily) பேரிலேயே எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தோம்” என்று அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

அதிமுகவிலிருந்து குதிரை பேரம் மூலம் எம்எல்ஏக்கள் இழுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் புகார் அளித்துள்ள சூழலிலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும் இந்த விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னாள் எம்எல்ஏக்கள் அளித்த இந்த அதிகாரப்பூர்வ விளக்க அறிக்கைகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரவைத் தலைவர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்த விளக்கங்களின் அடிப்படையில், அடுத்தகட்டமாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எடுக்கப்போகும் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் தற்போதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *