இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்து கோனின் 316-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மறியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தவெக அரசின் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரான ஸ்ரீநாத் வருவதைக் காரணம் காட்டி, திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான (MP) கனிமொழியின் வாகனத்தைப் போலீசார் நடுவழியிலேயே மறித்து நிறுத்தியுள்ளனர். விஐபி பாதுகாப்பு நெறிமுறைகளைக் காரணம் காட்டி கனிமொழி எம்பியை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாவீரன் அழகுமுத்து கோன் நினைவிடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக எம்பி கனிமொழி தனது ஆதரவாளர்களுடன் வாகனத்தில் கட்டாலங்குளம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆனால், நினைவிடத்திற்குச் சற்று தொலைவிலேயே அவரது காரை வழிமறித்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், தவெக அமைச்சர் ஸ்ரீநாத் தற்பொழுது நினைவிடத்திற்குள் இருக்கிறார் என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக எம்பியின் வாகனத்தை உள்ளே அனுமதிக்க முடியாது என்றும் கூறி தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் திமுக நிர்வாகிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
போலீசாரின் இந்தச் செயலுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பிய போதிலும், அதிகாரிகள் வாகனத்தை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் அதிருப்தியடைந்த எம்பி கனிமொழி, போலீசாருடன் மேற்கொண்டு வாக்குவாதம் செய்யாமல் தனது காரை அங்கேயே நிறுத்திவிட்டு, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தனது ஆதரவாளர்களுடன் சாலையிலேயே நடந்து சென்று மாவீரன் அழகுமுத்து கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி மண்ணின் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியை ஒரு கிலோமீட்டர் நடக்க வைத்த சம்பவம் திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் தவெகவிற்கும் திமுகவிற்கும் இடையே ஏற்கனவே அரசியல் ரீதியாகப் பெரும் வார்த்தைப்போர் முற்றியுள்ள சூழலில், இந்தச் சம்பவம் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல அமைந்துள்ளது. தவெக அமைச்சர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரைத் திட்டமிட்டுப் போலீசார் அவமதித்துள்ளதாக திமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். தூத்துக்குடி கட்டாலங்குளத்தில் தவெக – திமுக இடையே ஏற்பட்டுள்ள இந்த நேரடி மோதல், வரும் நாட்களில் மாநில அளவில் மிகப்பெரிய அரசியல் விவாதமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.