Posted in

அரசியல் நாகரிகம் இல்லையா? முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு; திமுக எம்.பி ஆ.ராசா மீது அரசு மருத்துவர் புகார்!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா அவதூறாகவும் இழிவாகவும் பேசியதாகக் கூறி, பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அரசு மருத்துவர் ஒருவர் அதிரடியாகப் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாகத் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வரும் ராசாமணிகண்டன் என்பவர், மாவட்ட எஸ்.பி. லலித்குமாரைச் சந்தித்து இந்தப் புகார் மனுவை அளித்துள்ளார். கடந்த ஜூன் 25-ஆம் தேதி திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசா, தமிழகத்தில் அண்ணாவும், ராஜாஜியும் அமர்ந்த முதல்வர் நாற்காலியில் இன்று ‘நாதாரி தலைவர்கள்’ அமர்ந்திருக்கிறார்கள் என முதல்வர் விஜய்யைக் குறிவைத்து இழிவாகப் பேசியதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொதுவெளியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருப்பது அரசியல் நாகரிகத்திற்கு முற்றிலும் முரணானது என்றும், இது பொதுமக்களிடையே தேவையற்ற கருத்து மோதல்களையும் சமூக அமைதிக்குக் குந்தகத்தையும் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் மருத்துவர் ராசாமணிகண்டன் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார். கருத்துச் சுதந்திரத்திற்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் உரிய மதிப்பு அளிக்காமல் செயல்பட்ட ஆ.ராசா மீது போலீஸார் உடனடியாகச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசு மருத்துவரிடம் இருந்து பெறப்பட்ட இந்த விவகாரமான புகார் மனுவின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். எனினும், எஸ்பி அலுவலகத் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எம்பியான ஆ.ராசா மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *