தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உயர்தர மருத்துவ உபகரணங்களை மேம்படுத்தும் நோக்கில், ‘நலம் டி.என்’ (Nalam TN) என்ற புதிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை முதலமைச்சர் ஜே. ஜோசப் விஜய் முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ரூ.139.47 கோடி மதிப்பிலான புதிய மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்த முதல்வர், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,144 மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்குப் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இந்த விழாவில், மாற்றுத்திறனாளி மருத்துவருக்கு மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்று முதல்வர் விஜய் பணி ஆணையை வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவமும் அரங்கேறியது.
இவ்விழாவில் பங்கேற்றுப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ், ‘நலம் டி.என்’ இணையதளத்தின் நோக்கம் குறித்துப் பொதுமக்களிடம் மிகவும் உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்தார். அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்குப் பெரிய நிறுவனங்கள் தான் நிதியுதவி செய்ய வேண்டும் என்பதில்லை என்று குறிப்பிட்ட அவர், “நம்மிடம் வெறும் ரூ.100 இருந்தாலும் அதனைக் தாராளமாகக் கொடுக்கலாம்; பொதுமக்களின் இந்தச் சிறு பங்களிப்பு கூட ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த பெரிதும் உதவும்” என நெகிழ்ச்சியுடன் பேசினார். பொதுமக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளின் பிறந்தநாள் அல்லது திருமண நாட்களை முன்னிட்டு இந்த இணையதளம் வழியே நேரடியாகப் பங்களிக்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஒரு லாப நோக்கமற்ற நிறுவனமாக இந்த ‘நலம் டி.என்’ தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி (CSR), தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர் நன்கொடையாளர்கள் தாங்கள் விரும்பும் குறிப்பிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைக்கே நேரடியாகவும் பாதுகாப்பாகவும் நிதியுதவி வழங்க முடியும். இந்த இணையதளத்தின் மூலம் பெறப்படும் நிதிகள் மற்றும் செலவினங்கள் அனைத்தும் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் (Transparent) பராமரிக்கப்படும் என்பதால், பொதுமக்கள் எந்தவிதத் தயக்கமும் இன்றி தங்களின் பங்களிப்பை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தளம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே பெரு நிறுவனங்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அப்போலோ மருத்துவமனை மற்றும் கேப்லின் பாயிண்ட் லேபராட்டரிஸ் ஆகிய நிறுவனங்கள் தலா 1 கோடி ரூபாயை இதற்காக வழங்கியுள்ளன. மேலும், பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் QR-code வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பலரும் தங்களால் இயன்ற தொகையை அரசு மருத்துவமனைகளின் வளர்ச்சிக்காகச் செலுத்தத் தொடங்கியுள்ளனர். ஏழை எளிய மக்களுக்கு உலகத் தரத்திலான மருத்துவச் சேவைகளை எவ்வித தங்குதடையுமின்றி வழங்குவதற்கு, அரசின் இந்த ‘நலம் டி.என்’ கூட்டுப் பங்களிப்புத் திட்டம் ஒரு மிகச்சிறந்த மைல்கல்லாக அமையும் எனச் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.