தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு பிரபல நேரடி இசை பாரில் (Rong Beer Na Lat Phrao) கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட கொடூரத் தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 30 பேர் இன்னும் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கோர சம்பவத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிப்பிழைத்த 26 வயது இளைஞரான நத்தபாங் லகோர்ன் என்பவர் அக்கோர இரவை நினைவுகூர்ந்துள்ளார். சம்பவத்தன்று தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மேடைக்கு அருகில் அமர்ந்திருந்தபோது அங்கிருந்து வெள்ளை நிறப் புகை வந்ததாகவும், முதலில் அதனை ‘டிரை ஐஸ்’ (Dry Ice) புகை விளைவு என்று தவறாக நினைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அது தீ விபத்து என்று உணர்ந்த அடுத்த சில நொடிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அரங்கம் முழுவதும் இருள் சூழ்ந்ததாகவும், மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிய அந்த நொடிகள் மிகவும் கொடூரமானவை (Hectic) என்றும் அவர் கண்கலங்கத் தெரிவித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து நடந்த பாரில் இருந்து தப்பி ஓட முயன்ற பல வாடிக்கையாளர்கள், ஜன்னல்கள் இல்லாத கழிவறைகளுக்குள் தஞ்சம் புகுந்ததால் அங்கேயே புகையினால் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உடற்கூறாய்வுத் துறை அறிக்கையின்படி, பெரும்பாலான மரணங்கள் நச்சுப் புகையை சுவாசித்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறலாலேயே நிகழ்ந்துள்ளன. மேடையில் ஒலியமைப்பை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய ஃபோம் (Acoustic Foam) பொருட்கள் மீது தீப்பொறி பட்டதால், சில நொடிகளிலேயே அரங்கம் முழுவதும் நச்சுப் புகையும் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பும் பரவியதாக தீயணைப்புத் துறை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
சீலிங்கில் பொருத்தப்பட்டிருந்த ஏர் கண்டிஷனர் அல்லது சர்க்யூட் பிரேக்கரில் ஏற்பட்ட மின்கசிவு (Electrical Short Circuit) காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவசரக்கால வெளியேறும் வழிகள் (Emergency Exits) மரப் பெட்டிகளாலும் மேஜைகளாலும் அடைக்கப்பட்டிருந்தது உயிர்ச்சேதம் அதிகரிக்க முக்கியக் காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, தாய்லாந்து பிரதமர் மற்றும் பாங்காக் ஆளுநர் ஆகியோர் நாடு முழுவதும் உள்ள அனைத்து பொழுதுபோக்கு இடங்களிலும் கடுமையான தீ பாதுகாப்பு தணிக்கைகள் மற்றும் அவசரக்கால வழிகளை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளனர்.