Posted in

முஸ்லிம்களைக் கொல்ல வேண்டும்! – அமெரிக்கா மாலில் இந்திய இளைஞரை 15 முறை கொடூரமாகக் குத்தி தாக்குதல்!

அமெரிக்காவின் உட்டா (Utah) மாகாணத்தில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில், இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் ஒருவர் அவரது மதத்தின் காரணமாகக் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. உட்டாவின் வெஸ்ட் வேலி சிட்டியில் அமைந்துள்ள ‘வேலி ஃபேர் மால்’ (Valley Fair Mall) வணிக வளாகத்தில் உள்ள ஒரு சிறிய வணிகக் கடையில் (Kiosk) வேலை பார்த்து வந்த சோஹைல் என்ற இந்திய இளைஞரே இந்த இனவெறி மற்றும் மதவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

சம்பவத்தன்று, 48 வயதான பீட்டர் மைக்கேல் லார்சன் (Peter Michael Larsen) என்ற நபர் சோஹைலை அணுகியுள்ளார். முதலில் அவரது பெயர் என்னவென்று கேட்டுவிட்டு, பின்னர் அவரது மதம் என்னவென்று விசாரித்துள்ளார். சோஹைல் தான் ஒரு இஸ்லாமியர் என்று கூறியதும், தாகமாக இருக்கிறது என்று கூறி குடிக்க ஒரு தண்ணீர் பாட்டிலைக் கேட்டுள்ளார். சோஹைல் அவருக்குத் தண்ணீர் எடுப்பதற்காகப் பின்னோக்கித் திரும்பிய அந்த நொடியில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சோஹைலை லார்சன் கொடூரமாகக் குத்தத் தொடங்கியுள்ளார்.

சுமார் 15 முறை உடல் முழுவதும் கொடூரமாகக் குத்தப்பட்டதில் சோஹைல் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டு, அந்த வன்முறை நபரைத் தடுத்துப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த சோஹைல் உடனடியாக மீட்கப்பட்டு அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இதயம் மற்றும் நுரையீரல் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அடுத்தடுத்து அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது.

போலீசாரின் விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட குற்றவாளி பீட்டர் லார்சன், “முஸ்லிம்களைக் கொல்வதே எனது நோக்கம். அதனால்தான் அவரைத் தேர்ந்தெடுத்துக் குத்தினேன்” என்று எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். அமெரிக்காவில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இஸ்லாமிய எதிர்ப்புக் கொள்கைகளும் (Islamophobia), வெறுப்புப் பேச்சுகளுமே இத்தகைய கொடூரத் தாக்குதல்களுக்குக் காரணம் என அமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் (CAIR) உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் தங்களது வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.

Leave a Reply