தலைமைச் செயலகத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்குச் செல்வது போலப் புறப்பட்டு, யாருமே எதிர்பார்க்காத வகையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதிக்குள் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூலை 17, 2026) மாலை அதிரடியாக நுழைந்து ‘மின்னல் வேக’ ஆய்வை மேற்கொண்டார். முதல்வர் திடீரென காரை நிறுத்தி உள்ளே சென்றதைப் பார்த்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரும், விடுதி ஊழியர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் பதறிப்போய் உறைந்து நின்றனர்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 44 கோடி ரூபாய் செலவில், 10 தளங்கள் மற்றும் லிப்ட் வசதிகளுடன் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட இந்த விடுதியில் அடிப்படை வசதிகள் மோசமாக இருப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, நேரடியாகக் களத்தில் இறங்கிய முதலமைச்சர் விஜய், விடுதியின் சமையலறை, தங்கும் அறைகள் மற்றும் கழிப்பறைகளை அங்குலம் அங்குலமாகப் பார்வையிட்டார். அப்போது, முதல்வரைக் கண்டதும் ஓடிவந்த ஏழை எளிய கல்லூரி மாணவர்கள், விடுதியில் தங்களுக்கு நேரும் அவலங்களை அடுக்கடுக்கான புகார்களாக அவரிடம் கொட்டித் தீர்த்தனர்.
“முறையான சமையல் பராமரிப்பு இல்லாததால் தினந்தோறும் சாப்பாட்டில் புழு, பூச்சி மற்றும் வண்டுகள் கிடக்கின்றன; அதைப்பற்றிக் கேள்வி கேட்டால் ஊழியர்கள் எங்களை இழிவாகப் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்” என்று மாணவர்கள் முதல்வரிடம் முறையிட்டனர். மேலும், “பகுதி நேர வேலைகளுக்குச் சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு மேல் தாமதமாக வரும் மாணவர்களை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காமல் கதவை மூடிவிடுகிறார்கள்; இதனால் தங்குவதற்கு இடமில்லாமல், கொசுக்கடிக்கு நடுவே வராந்தாவிலும் மொட்டை மாடியிலும் தூங்கும் அவல நிலை நீடிக்கிறது” என்று மாணவர்கள் தங்களின் வேதனையைப் பகிர்ந்தனர்.
மாணவர்களின் அடுக்கடுக்கான புகார்களைக் கேட்டு முகம் சிவந்த முதலமைச்சர் விஜய், உடனடியாக விடுதி காப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து அங்கேயே வைத்துக் கடுமையான கேள்விகளை எழுப்பி எச்சரித்தார். “மாணவர்கள் உண்ணும் உணவிலும், தங்கும் வசதியிலும் எவ்வித அலட்சியத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று குறிப்பிட்ட அவர், விடுதியில் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் இன்னும் சில தினங்களுக்குள் சீர் செய்ய வேண்டும் எனத் தவெக அரசு தரப்பில் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார். அண்மையில் எழும்பூர் மருத்துவமனையில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, தற்போது அரசு விடுதியிலும் முதல்வர் விஜய் நடத்திய இந்த அதிரடி ரெய்டு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.