Posted in

கோட்டையை உலுக்கிய உத்தரவு! யாருக்கும் தெரியாமல் முக்கிய அதிகாரிகளை மாற்றிய முதல்வர் விஜய் — பின்னணி என்ன?

தமிழகக் கோட்டை வட்டாரத்தையே புரட்டிப் போடும் வகையில், மிக முக்கிய உயர் அதிகாரிகளான லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் அருண் ஐபிஎஸ் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் உமாநாத் ஐஏஎஸ் ஆகிய இருவரையும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் யாருக்கும் தெரியாமல் நேரடியாக நள்ளிரவில் அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். முதல்வருக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் பனையூர் மற்றும் கோட்டை முக்கிய விஐபிகளுக்கே கூட முன்கூட்டியே தெரியாமல் இந்த ‘மின்னல் வேக’ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதிகாரத்துவ மத்தியில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த அருண் ஐபிஎஸ்-ஐ உடனடியாக மாற்றக் கோரி, முதலமைச்சரின் அலுவலகத்தில் இருந்து தலைமைச் செயலாளருக்கு நேரடி உத்தரவு (Direct Instruction) பறந்துள்ளது. தனக்கு இடமாற்ற உத்தரவு வந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த அருண் ஐபிஎஸ், தனக்கு நெருக்கமான பனையூர் விஐபிகளிடம் இதுகுறித்து விசாரித்தபோது, “சிஎம் (CM) நேரடியாக எடுத்த முடிவு சார், எங்களுக்கே இது பெரிய ஷாக் தான்” என அவர்கள் கைவிரித்ததாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிப் பிரமுகர் ஒருவரின் வீட்டில் நடந்த ரகசிய ரெய்டு குறித்த தகவல்கள் முன்கூட்டியே கசிந்த விவகாரத்தில், உளவுத்துறை அளித்த ரகசிய அறிக்கையின் அடிப்படையிலேயே அருண் ஐபிஎஸ் மீது முதல்வர் விஜய் இந்த ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

இதேபோல், முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான பெரம்பூர் விசிட்டின் போது, அங்கு நடைபெற்ற ரேஷன் கடை விழாவில் முதலமைச்சர் விஜய் பக்கத்திலேயே சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தவர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் உமாநாத் ஐஏஎஸ். ஆனால், அந்த விழா முடிந்த அடுத்த ஒரே மணி நேரத்தில் அவரைப் பதவியிலிருந்து தூக்கி ‘காத்திருப்புப் பட்டியலுக்கு’ (Waiting List) தள்ளச் சொல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அதிரடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் முதன்மைத் தனிச் செயலாளராகப் பணியாற்றிய அனுபவமிருந்தும், தவெக ஆட்சியில் இவருக்கு வழங்கப்பட்ட முக்கியப் பதவி அடுத்த சில வாரங்களிலேயே பறிக்கப்பட்டுள்ளது.

உணவுத்துறையில் பருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக வழங்கப்பட்ட சுமார் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஒரு மெகா டெண்டரை (Mega Tender), சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கோ அல்லது முதலமைச்சரின் கவனத்திற்கோ கொண்டு செல்லாமல், அவசர அவசரமாகச் சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்குச் சாதகமாக உமாநாத் ஐஏஎஸ் ஓகே செய்ததாகக் கடுமையான லஞ்சப் புகார் எழுந்தது. இந்த கோப்பு நேரடியாக முதல்வர் விஜய்யின் கைகளுக்குச் சென்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் உமாநாத் அதிரடியாகத் தூக்கியடிக்கப்பட்டு, தற்போது தொழில் மற்றும் வர்த்தகத் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். “தனது ஆட்சியில் ஊழல் புகார்களுக்கு இடமே இல்லை” என்பதை நிரூபிக்கும் வகையில், முதல்வர் விஜய் தன் வசம் உள்ள துறைகளில் காட்டும் இந்தத் தனிப்பட்ட ஆக்ரோஷம் ஐஏஎஸ், ஐபிஎஸ் வட்டாரங்களை கதிகலங்க வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *