ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது வயோதிகத்தைத் தடுத்து மரணமில்லா பெருவாழ்வை (Imortality) அடைவதற்காகப் பில்லியன் கணக்கான டாலர்களைக் கொட்டி ரகசிய விண்வெளி மற்றும் மருத்துவப் பரிசோதனைக் கூடங்களை அமைத்து வருவதாக லண்டன் மற்றும் சர்வதேச ஊடகங்கள் அதிர்ச்சியூட்டும் புலனாய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் “புதிய ஆரோக்கியப் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்” (New Health Preservation Technologies) என்ற பெயரில் சுமார் 26 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.15 லட்சம் கோடி) அரசு நிதியுதவியுடன் இந்த அதிரடித் திட்டம் அதிவேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 73 வயதை எட்டியுள்ள புதின், தனது வாழ்நாளை நீட்டித்து அதிகாரத்தைத் தக்கவைக்கவே இந்த வினோத முயற்சியில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் கடந்த ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒரு ராணுவ அணிவகுப்பின் போது, “மனிதர்கள் தங்களின் உடலுறுப்புகளை மாற்றுவதன் மூலம் மரணமில்லா நிலையை அடைய முடியும்” என்று புதின் பேசிய ஆடியோ ரகசிய மைக் (Hot Mic) மூலமாக கசிந்து உலகளவில் விவாதத்தைக் கிளப்பியது. வெறும் அரட்டை என நினைத்த இந்த விவகாரத்திற்குப் பின்னால், ஒரு பிரம்மாண்ட அரசாங்கத் திட்டமே இயங்கி வருவது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. செல்கள் வயதாகிப் போவதைத் தடுக்கும் அதிநவீன மரபணு சிகிச்சை (Gene Therapy), மிகக் கடுமையான உறைபனி குளிரூட்டல் சிகிச்சை (Cryotherapy) மற்றும் செயற்கை தடுப்பூசிகள் ஆகியவை இதற்காக உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரகசியத் திட்டத்தின் மற்றொரு அச்சுறுத்தும் பகுதியாக, ஆய்வகங்களில் ‘பிராங்கென்ஸ்டைன்’ (Frankenstein) பாணி திசு மற்றும் உறுப்பு வளர்ப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 3D பயோபிரிண்டிங் (3D Bioprinting) தொழில்நுட்பம் மூலம் மனிதச் செல்களை அடுக்கடுக்காக அடுக்கிப் புதிய உறுப்புகளைத் தயாரிப்பது மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ‘மினி-பன்றிகளின்’ (Mini-Pigs) உடலில் மனித உடலுக்குப் பொருந்தக்கூடிய மாற்று உறுப்புகளை வளர்த்தெடுப்பது போன்ற அதிதிடுக்கிடும் சோதனைகள் ரஷ்ய அறிவியல் நிறுவனங்களில் தற்பொழுது அரங்கேறி வருகின்றன. 2030-ஆம் ஆண்டிற்குள் மனித உடலின் எந்தவொரு பழுதடைந்த உறுப்பையும் முழுமையாக மாற்றியமைக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இந்தத் திட்டத்திற்குப் பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ள போதிலும், புதினுக்கு மிகவும் நெருக்கமான அவரது மூத்த மகளும் நாளமில்லாச் சுரப்பி நிபுணருமான மரியா வொரொன்சோவா (Maria Vorontsova) மற்றும் அணுசக்தி விஞ்ஞானி மிக்ஹைல் கோவல்சுக் ஆகியோர் இந்த விண்வெளிப் பாணி நீண்ட ஆயுள் திட்டத்தை முன்னின்று வழிநடத்தி வருகின்றனர். சாதாரண ரஷ்ய குடிமக்களின் சராசரி ஆயுட்காலம் 68 ஆக இருக்கும் நிலையில், அதிபர் புதின் மற்றும் அவரது 70-களில் இருக்கும் மூத்த அதிகாரத்துவ வர்க்கத்தினர் மட்டுமே பயன்பெறும் வகையில் இந்த கோடிக்கணக்கான நிதி விரயம் செய்யப்படுவதாகச் சுதந்திர விஞ்ஞானிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கத்திய நாடுகளின் தடைகளையும் மீறி ரஷ்யா நடத்தி வரும் இந்த ‘சாகாவர’ வேட்டை, உலக அரசியலில் பெரும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.