தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் தொழில் துறை அமைச்சரும், சிவகாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். கீர்த்தனா, உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவம் மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்துப் பகிரங்கமாகப் பேசியுள்ள கருத்துக்கள் மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பலத்த கவனத்தைப் பெற்றுள்ளன. தங்கள் பகுதி குடிநீர், சாலை வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் தீராமல் நிற்பதற்குப் வார்டு கவுன்சிலர்கள் இல்லாததே முதன்மைக் காரணம் என அவர் ஓப்பனாகப் பேசியுள்ளார்.
தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர் கீர்த்தனா, மக்கள் சந்திக்கும் அன்றாடப் புகார்களுக்கு உடனடித் தீர்வு காண்பதில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பங்களிப்பு எவ்வளவு அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டினார். “பொதுமக்கள் தங்கள் தெருவில் இருக்கும் சிறிய பிரச்சினைகளுக்காகவும் எம்.எல்.ஏ அல்லது அமைச்சரைத் தேடி வர வேண்டிய சூழல் உள்ளது. வார்டு மட்டத்தில் மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் களத்தில் நின்று தீர்த்து வைக்கக் கவுன்சிலர்கள் இல்லாததால் தான் இந்த நிலை நீடிக்கிறது” என்று அவர் யதார்த்த நிலையை வெளிப்படையாகக் கூறினார்.
மாநிலத்தில் முழுமையான நிர்வாக மாற்றத்தையும், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளையும் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டுமானால், சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலும் மிக முக்கியமானது என்று அமைச்சர் வலியுறுத்தினார். சட்டமன்றத்தில் ஏற்படுத்திய மாற்றத்தைப் போலவே, உள்ளாட்சியிலும் மக்கள் நல்லாட்சியை மலரச் செய்ய வேண்டும் என்றும், மக்களின் அன்றாடச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தவெகவின் ‘விசில்’ சின்னத்திற்கு மீண்டும் வாக்களித்து உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அமைச்சரின் இந்த அதிரடி மற்றும் வெளிப்படையான பேச்சு, மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகளின் ஆணிவேரைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே வேளையில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தவெக தற்போதே களப்பணிகளைத் தீவிரப்படுத்தி வருவதையும், தொகுதி மட்டத்திலான மக்கள் குறைகளைத் தீர்க்கத் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதையும் அமைச்சரின் இந்த ஓப்பன் டாக் உறுதிப்படுத்தியுள்ளது.