Posted in

சீனாவின் துல்லியமான ‘ரைபிள்’ ட்ரோன்: அதிரவைத்த அதிநவீன போர் வியூகம்!

சீனாவின் துல்லியமான ‘ரைபிள்’ ட்ரோன்:  அதிரவைத்த அதிநவீன போர் வியூகம்! - Image 1


வானிலிருந்து பாயும் தோட்டாக்கள்! சீனாவின் துல்லியமான ‘ரைபிள்’ ட்ரோன்: அமெரிக்காவையே அதிரவைத்த அதிநவீன போர் வியூகம்!

உலக நாடுகளிடையே ட்ரோன் (UAV) தொழில்நுட்பத்தில் கடும் போட்டி நிலவி வரும் சூழலில், சீனா ஒரு படி மேலே சென்று துப்பாக்கி ஏந்திய ட்ரோனை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. வுஹான் கைடு இன்ஃப்ராரெட் (Wuhan Guide Infrared) நிறுவனம் மற்றும் சீன ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை அகாடமி இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன. சாதாரண ட்ரோன்களை விடவும், இது ராணுவத்தின் ஸ்டாண்டர்ட் ரைபிள்களைச் சுமந்து சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த ட்ரோன் தரையிலிருந்து 10 மீட்டர் உயரத்தில் பறந்தபடி, 100 மீட்டர் தொலைவில் இருந்த மனித அளவிலான இலக்கைத் துல்லியமாகச் சுட்டு வீழ்த்தியது. மொத்தம் 20 முறை சுடப்பட்டதில், அனைத்துத் தோட்டாக்களும் இலக்கைத் தாக்கின. குறிப்பாக, 10 தோட்டாக்கள் வெறும் 11 சென்டிமீட்டர் சுற்றளவிற்குள் மிகத் துல்லியமாகப் பாய்ந்துள்ளன. இதற்காகச் சீனப் பொறியாளர்கள் காற்று, தூரம் மற்றும் அழுத்தத்தைக் கணக்கிட்டுத் தானாகவே குறிவைக்கும் சிறப்பு மென்பொருளை (AI Software) உருவாக்கியுள்ளனர்.

இந்த ட்ரோனின் சிறப்பம்சமே, இதற்காகத் தனியாகத் துப்பாக்கிகளை வடிவமைக்க வேண்டிய அவசியமில்லை. சீன ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் வழக்கமான அஸால்ட் ரைபிள்களையே (Assault Rifle) இதில் பொருத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் போர்க்களத்தில் வீரர்களுக்குப் பதிலாக இந்த ட்ரோன்களை முன்னிலைப் படுத்தித் தாக்குதல் நடத்த முடியும். தற்போது ஒரே ஒரு முறை மட்டுமே சுடும் (Single Shot) வசதி இதில் இருந்தாலும், விரைவில் தானியங்கி முறையில் சுடும் வசதி மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு அதிரடி நடவடிக்கையாக, ‘ஜியுடியான்’ (Jiutian) எனப்படும் உலகின் மிகப்பெரிய ‘ட்ரோன் தாய் கப்பலை’ (Drone Mothership) சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 16 டன் எடை கொண்ட இந்த பிரம்மாண்ட ட்ரோன், 100-க்கும் மேற்பட்ட சிறிய ரக ‘காமிகாஸே’ (Kamikaze) தற்கொலைப் படை ட்ரோன்களைத் சுமந்து செல்லும் திறன் கொண்டது. 15,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் இது, எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் 6,000 கிலோ வெடிபொருட்களை ஏற்றிச் சென்று வான்வழி மற்றும் கடல்வழித் தாக்குதல்களை நடத்தும் வல்லமை பெற்றது.

சீனாவின் இந்த அசுர வேக ராணுவ வளர்ச்சி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாகத் தைவான் விவகாரத்தில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இத்தகைய ஆளில்லா போர் கருவிகள் போரின் போக்கையே மாற்றக்கூடும் என ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா தனது ட்ரோன் தொழில்நுட்பத்தை மேம்படுத்த போராடி வரும் வேளையில், சீனா ஒரே நேரத்தில் பல முனைத் தாக்குதல் நடத்தும் ‘சுவர்ம்’ (Swarm) தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *