இரானின் பரமோன்னத தலைவரான முஜ்தபா கமேனியின் (Mojtaba Khamenei) உடல்நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அவர் ஆரோக்கியமாக இருப்பது போன்ற புதிய வீடியோ ஒன்றை இரானின் மெஹர் (Mehr) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ காட்சி சர்வதேச அரசியலிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முன்னாள் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மகனான 56 வயதான முஜ்தபா கமேனி இரானின் புதிய பரமோன்னத தலைவராகப் பொறுப்பேற்றார். எனினும், பொறுப்பேற்றது முதல் அவர் இதுவரை எவ்வித நேரடிப் பொதுநிகழ்வுகளிலும் பங்கேற்கவில்லை. இதனால் அவர் படுகாயமடைந்து படுக்கையில் இருப்பதாகவும் அல்லது உயிரிழந்துவிட்டதாகவும் சர்வதேச அளவில் பல்வேறு ஊகங்கள் பரவி வந்தன.
இந்த நிலையில், இஸ்ரேலின் ‘சேனல் 14’ மற்றும் ‘ஜெருசலேம் போஸ்ட்’ உள்ளிட்ட முன்னணி ஊடகங்கள், முஜ்தபாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் விரைவில் உயிரிழக்கக் கூடும் என்றும் செய்திகளை வெளியிட்டன. மேலும், இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் பரமோன்னத தலைவருடன் நேரடியாகத் தொடர்புகொள்வது சவாலாக இருப்பதாகத் தெரிவித்திருந்த கருத்துகள் இந்த வதந்திகளுக்கு மேலும் வலுசேர்த்தன.
இத்தகைய கூற்றுக்களைப் பொய்யாக்கும் விதமாக, மெஹர் செய்தி நிறுவனம் வெளியிட்ட 12 வினாடிகள் கொண்ட வீடியோவில், முஜ்தபா கமேனி தனது ஆலோசகர்களுடன் அமைதியாக ஆலோசனை நடத்துவது போலக் காட்சியளிக்கிறார். இருப்பினும், இந்த வீடியோ எப்போது, எங்குப் படமாக்கப்பட்டது என்ற விவரங்கள் எதையும் இரான் நிர்வாகம் வெளியிடாததால், அவரது தற்போதைய உண்மை நிலை குறித்த சர்வதேச உளவு அமைப்புகளின் சந்தேகங்கள் இன்னமும் முழுமையாக விலகவில்லை.