Posted in

இஸ்ரேல் தேர்தலில் நியூயார்க் மேயர்: நெதன்யாகு கட்சியின் பிரசார விளம்பரத்தில் இடம் பிடித்த ஜோஹ்ரன் மம்தானி!

இஸ்ரேலில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையொட்டி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் (Likud) கட்சி வெளியிட்டுள்ள புதிய தேர்தல் பிரசார விளம்பரம் மற்றும் பதாகைகளில் நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானியின் உருவம் இடம் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விளம்பரம், Tel Aviv நகரில் பிரம்மாண்ட பதாகையாக வைக்கப்பட்டுள்ளதுடன் நெதன்யாகுவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்திலும் பகிரப்பட்டுள்ளது.

அந்த விளம்பரப் பதாகையில், நியூயார்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி, ஈரானின் உச்சத் தலைவர் ஆயதுல்லா மொஜ்தபா கமேனி, துருக்கி அதிபர் ரசெப் தாயிப் எர்டோகன் மற்றும் ஹெஸ்பொல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் நைம் காசிம் ஆகிய நால்வரின் புகைப்படங்களும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், “இவர்கள் அனைவரும் நெதன்யாகு தேர்தலில் தோற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்; அவர்களை வெல்ல விட்டுவிடாதீர்கள்” என்ற முழக்கமும் அதில் இடம்பெற்றுள்ளது.

நியூயார்க் மேயராகப் பொறுப்பேற்றது முதல் நெதன்யாகுவின் காசா மீதான போர்க் கொள்கைகளை ஜோஹ்ரன் மம்தானி கடுமையாக விமர்சித்து வருகிறார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பிடியாணைக்கு மதிப்பளித்து, நெதன்யாகு நியூயார்க் வருகை தந்தால் அவரைப் போர்க்குற்றவாளியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் பகிரங்கமாக வலியுறுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே, நெதன்யாகுவின் கட்சி அவரை இஸ்ரேலின் எதிரி போலச் சித்திரிக்க முற்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கும் வேளையில், தமக்கு எதிராக சர்வதேச அளவில் உருவாகியுள்ள எதிர்ப்பை உள்நாட்டு அரசியல் ஆதாயமாக மாற்ற நெதன்யாகு முயல்வதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவின் முன்னணி ஜனநாயகக் கட்சி அரசியல்வாதி ஒருவரை ஈரானிய மற்றும் ஹெஸ்பொல்லா தலைவர்களுடன் ஒப்பீடு செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரம், ராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.